அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருந்த சொகுசுக் கப்பலில் இருந்து கடலில் தவறி விழுந்ததாகச் சந்தேகிக்கப்படும் 72 வயதுடைய பிரித்தானியப் பெண் ஒருவரைத் தேடும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பெண், கடந்த திங்கட்கிழமை பிற்பகல் கடைசியாகக் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஸ்பெயினின் மலாகா நகரிலிருந்து கரீபியன் தீவுகளை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த Marella Voyager என்ற சொகுசுக் கப்பலில் அவர் பயணித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை மாலை, குறித்த பெண்ணின் அறையைச் சுத்தம் செய்யச் சென்ற பணியாளர், முந்தைய இரவு அவரது படுக்கை பயன்படுத்தப்படாமல் இருந்ததை அவதானித்ததைத் தொடர்ந்து இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, கப்பல் முழுவதும் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன், பயணிகள் அனைவரும் குறிப்பிட்ட இடங்களில் ஒன்றுகூடுமாறு அறிவுறுத்தப்பட்டனர். பயண அட்டைகளைப் பரிசோதித்து, கப்பலில் இருந்த அனைவரும் கணக்கிடப்பட்டனர்.
எனினும், குறித்த பெண் கப்பலில் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, கடலில் விழுந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 866 அடி நீளமுடைய குறித்த கப்பல், பெண் கடலில் விழுந்திருக்கலாம் எனக் கருதப்படும் இடத்திலிருந்து ஏற்கனவே சுமார் 550 மைல் தூரம் பயணித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் கப்பலை மீண்டும் திருப்பிச் சென்று தேடுதல் நடத்துவது சாத்தியமற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்காவின் வெர்ஜீனியா மாநிலத்தில் உள்ள கடலோரக் காவல்படையின் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையம், அருகிலுள்ள கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுத்து, காணாமல் போன பெண்ணைத் தீவிரமாகக் கண்காணிக்குமாறு கோரியுள்ளது.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் அட்லாண்டிக் பெருங்கடலில் கடுமையான புயல் நிலவியதாகவும், பலத்த காற்று மற்றும் கடல் அலைகள் காரணமாகக் கப்பல் பயணிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், காணாமல் போன பயணியின் மறைவு சம்பவத்திற்கும் மோசமான வானிலைக்கும் தொடர்பு இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனக் கப்பலை இயக்கும் TUI நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கப்பலில் சுமார் 2,000 பயணிகளும் 800 பணியாளர்களும் இருந்ததாகவும், நவம்பர் 4ஆம் திகதி மலாகாவிலிருந்து புறப்பட்ட கப்பல், வெள்ளிக்கிழமை அன்டிகுவாவைச் சென்றடையத் திட்டமிடப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கப்பலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கமராக்களின் (CCTV) காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் TUI நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், காணாமல் போன பிரித்தானியப் பெண்ணின் குடும்பத்தினருக்கு உதவிகளை வழங்கி வருவதாகவும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணின் அடையாளம் இதுவரை பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. அவரின் குடும்பத்தினருக்கு அறிவிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





