அமெரிக்காவின் நியூயோர்க்கில் மூன்று மாடிக் கட்டடம் இடிந்து வீழ்ந்தது – இருவர் உயிரிழப்பு; 17 பேர் காயம்!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள புரூக்ளின் பகுதியில் மூன்று மாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், சிறுவர்கள் உட்பட குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் புதன்கிழமை (11) மாலை சுமார் 4 மணியளவில், பிளாட்புஷ் பகுதியில் உள்ள பெட்ஃபோர்ட் அவென்யூவில் இடம்பெற்றுள்ளது.

இடிந்து வீழ்ந்த கட்டடம் கட்டுமானப் பணிகள் இடம்பெற்றுவந்த திறந்தவெளிப் பகுதியை அண்மித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டடம் இடிந்து வீழ்ந்தபோது அங்கு பணியில் இருந்த கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

உயிரிழந்த இருவரில் கட்டுமானத் தொழிலாளி ஒருவரும் அடங்குவதாக நியூயோர்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார்.

காயமடைந்த 17 பேரில் ஏழு சிறுவர்களும் தீயணைப்புப் படை வீரர் ஒருவரும் அடங்குகின்றனர். அவர்களில் நால்வர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதுடன், ஏனைய 12 பேரின் நிலைமை சீராக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காயமடைந்த தீயணைப்பு வீரருக்கு சிறிய காயங்களே ஏற்பட்டுள்ளன.

இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சம்பவ இடத்திற்கு 250க்கும் மேற்பட்ட தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவப் பணியாளர்கள் விரைந்துள்ளனர்.

மீட்புப் பணியின்போது இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். மேலும், சிலர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஒருவரால் மீட்புப் பணியாளர்களுடன் தொடர்புகொள்ள முடிந்ததாகவும், அவர் பின்னர் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணியாளர்கள் நாய்களின் உதவியுடனும், இடிபாடுகளை கைகளால் அகற்றியும் உயிர் பிழைத்தவர்களைத் தேடி வருகின்றனர்.

இதற்கிடையில், குறித்த கட்டடம் 1930களில் நிர்மாணிக்கப்பட்ட பழைய கட்டடம் எனத் தெரியவந்துள்ளது. அதன் அருகிலுள்ள காணியில் புதிய கட்டடம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளும், நில அகழ்வுப் பணிகளும் இடம்பெற்று வந்துள்ளன.

குறித்த கட்டுமானப் பகுதிக்கு அண்மையில், கடந்த ஏப்ரல் மாதம் கட்டுமானப் பணிகள் தொடர்பான விதிமீறல் அறிவித்தல் ஒன்று வழங்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் அது தீர்க்கப்பட்டதாகப் பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இடிந்து வீழ்ந்த கட்டடத்தில் பாதுகாப்பற்ற மின்சார வயரிங், பழுதடைந்த கதவுகள், கூரைக் கசிவுகள் மற்றும் புகை, கார்பன் மொனொக்சைட் எச்சரிக்கை கருவிகளில் குறைபாடுகள் உள்ளிட்ட 98 திறந்தநிலை விதிமீறல்கள் பதிவாகியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும், கட்டடம் இடிந்து வீழ்ந்தமைக்கு அருகிலுள்ள நில அகழ்வுப் பணிகளோ அல்லது ஏற்கனவே பதிவாகியிருந்த விதிமீறல்களோ காரணமா என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், அருகிலுள்ள கட்டடங்களின் உறுதித்தன்மையையும் அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். குறித்த கட்டுமானப் பகுதிக்கான அனைத்து வேலைகளையும் உடனடியாக நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகர மேயர் மற்றும் ஆளுநர் ஆகியோர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore