பிரித்தானியாவின் தெற்கு வேல்ஸ் பகுதியில், உயிரிழந்த தனது 89 வயதான தாயின் சடலத்தை சுமார் மூன்று ஆண்டுகளாக வீட்டிலுள்ள குளிரூட்டிப் பெட்டியில் மறைத்து வைத்திருந்த 60 வயதுடைய மகனுக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் பிலிப்ஸ் (Christopher Phillips) என்பவர், தனது தாயான சில்வியா பிலிப்ஸின் (Silvia Phillips) சடலத்தை வீட்டின் வரவேற்பறையில் வைக்கப்பட்டிருந்த பெரிய குளிரூட்டிப் பெட்டிக்குள் மறைத்து வைத்திருந்ததுடன், அவர் உயிரிழந்த பின்னரும் அரசாங்கத்திடமிருந்து தொடர்ந்து உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார்.
கடந்த பெப்ரவரி 17ஆம் திகதி தெற்கு வேல்ஸ் பொலிஸார் அவரது வீட்டிற்குச் சென்றபோது இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சில்வியா பிலிப்ஸின் உடல்நிலை குறித்து நீண்டகாலமாகத் தகவல் கிடைக்காததால், அவரது நலன் தொடர்பில் குடும்ப வைத்தியர் ஒருவர் கவலை வெளியிட்டிருந்தார். இதனையடுத்து பொலிஸார் விசாரணைக்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது, தாயார் தொடர்பான கேள்விகளுக்கு கிறிஸ்டோபர் பிலிப்ஸ் தெளிவான பதில்களை வழங்காமல் மழுப்பியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த பொலிஸார் வீட்டைச் சோதனையிட்டுள்ளனர்.
அப்போது வரவேற்பறையில் இருந்த பெரிய குளிரூட்டிப் பெட்டியைத் திறந்தபோது, அதற்குள் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் அவரது தாயாரின் உறைந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலத்தின் மீது சிறுத்தை வடிவிலான போர்வை போர்த்தப்பட்டிருந்ததுடன், “அம்மாவுக்கு, கிறிஸ்டோபர் மற்றும் டினாவிடமிருந்து” எனக் குறிப்பிடப்பட்ட பிறந்தநாள் வாழ்த்து அட்டையும் வைக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின்போது, தாயார் உயிரிழந்த பின்னர் அவரைப் பிரிந்து இருக்க விரும்பவில்லை என்றும், அவருடன் மேலும் சிறிது காலம் இருக்க வேண்டும் என நினைத்ததாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.
அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், தாயாரின் மரணத்தால் ஏற்பட்ட கடுமையான துயரத்தின் காரணமாகவே அவர் சடலத்தை வீட்டில் வைத்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தாயாரின் அருகில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது அவரது கையைப் பிடித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்துப் பேசுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் தனது தாயாரை இரண்டு வயதில் தத்தெடுத்துக் கொண்டதாகவும், இருவரும் சுமார் 50 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2008ஆம் ஆண்டு முதல் அவர் தனது தாயாரின் பிரதான பராமரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
சில்வியா பிலிப்ஸ் 2023ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் திகதி உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்த இரண்டு நாட்களுக்குப் பின்னர் கிறிஸ்டோபர் இணையவழி விற்பனை நிறுவனத்திடமிருந்து குளிரூட்டிப் பெட்டி ஒன்றைக் கொள்வனவு செய்து, அதற்குள் தாயாரின் சடலத்தை வைத்துள்ளார்.
இதற்கிடையில், தாயார் உயிரிழந்ததை உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்காமல் தொடர்ந்து அரச உதவித்தொகைகளைப் பெற்றுள்ளார்.
அவர் பெற்றுக்கொண்ட அரச நிதியுதவிகளின் மொத்தத் தொகை 78,190.92 பிரித்தானிய பவுண்டுகளாகும். இதில் அரச ஓய்வூதியம், ஓய்வூதியக் கொடுப்பனவு, பராமரிப்பு உதவித்தொகை, குளிர்கால எரிபொருள் உதவி, வாழ்க்கைச் செலவு நிவாரணம் மற்றும் வீட்டுவசதி உதவித்தொகை ஆகியவை அடங்குகின்றன.
தாயாரின் இறப்பை அறிவிக்காமல் மோசடியாக நிதியுதவி பெற்றமை மற்றும் சட்டபூர்வமான முறையில் நல்லடக்கம் செய்வதைத் தடுத்தமை ஆகிய குற்றங்களை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் மெர்திர் டிட்ஃபில் கிரவுன் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான பொலிஸாரின் விசாரணைக் காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. மேலும், இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பிரித்தானியாவின் Channel 5 தொலைக்காட்சியில் ‘Forensics: Murder Scene’ என்ற ஆவண நிகழ்ச்சியும் ஒளிபரப்பப்பட்டுள்ளது.





