சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் நீராவி ரயில் மோதி ஒருவர் உயிரிழப்பு; லண்டனில் சம்பவம்!

பிரித்தானியாவின் மேற்கு லண்டனில் நீராவி ரயில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரித்தானிய பொதுப் புகையிரதப் பாதையில் நீராவி ரயில் சம்பந்தப்பட்டு சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது உயிரிழப்பாக இந்தச் சம்பவம் கருதப்படுகிறது.

கடந்த புதன்கிழமை காலை சுமார் 6.30 மணியளவில் மேற்கு லண்டனிலுள்ள Hanwell ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புச் சுற்றுலாப் பயணத்திற்காக பயணிகளை ஏற்றிச் செல்ல லண்டனை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த நீராவி ரயிலே இவ்வாறு மோதியுள்ளது.

34028 Eddystone என்ற நீராவி இயந்திரத்துடன் பயணித்த ரயில், காலை 9.05 மணிக்கு லண்டன் Victoria நிலையத்திலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்டிருந்தது. Kent பகுதியைச் சுற்றிய பயணமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சேவைக்கு Armistice Steam Express எனப் பெயரிடப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் பிரித்தானிய போக்குவரத்துப் பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழப்பில் சந்தேகத்திற்கிடமான சூழ்நிலைகள் எதுவும் காணப்படவில்லை என்றும், மேலதிக விசாரணைக்காக மரண விசாரணை அதிகாரியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸாரும் அவசர மருத்துவப் பிரிவினரும் விரைந்த போதிலும், குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சுற்றுலா ரயில் சேவை இரத்து

இந்த நீராவி இயந்திரத்திற்குச் சொந்தமான Southern Locomotives Ltd நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், Hanwell நிலையத்தில் தமது 34028 Eddystone ரயில் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும், சம்பவத்தை நேரில் கண்ட ரயில் பணியாளர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

Armistice Steam Express சுற்றுலா ரயில் சேவையை நடத்தும் Railway Touring Company, இந்தச் சம்பவம் சுற்றுலாப் பயணம் ஆரம்பமாவதற்கு முன்னரே இடம்பெற்றதாகவும், பயணிகள் எவரும் இதில் சம்பந்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சுற்றுலாப் பயணம் இரத்துச் செய்யப்பட்டதுடன், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கும் ஏமாற்றத்திற்கும் நிறுவனம் மன்னிப்புக் கோரியுள்ளது.

1968ஆம் ஆண்டு பிரித்தானிய ரயில்வே சேவைகளிலிருந்து நீராவி இயந்திரங்கள் நீக்கப்பட்ட பின்னர், பொதுப் புகையிரதப் பாதையில் நீராவி ரயில் சம்பந்தப்பட்டு உயிரிழப்பு இடம்பெற்ற முதலாவது சம்பவமாக இது கருதப்படுகிறது.

தற்போது பிரித்தானியா முழுவதும் ஆண்டுதோறும் சுமார் 500 நீராவி ரயில் பயணங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore