ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவரின் மெய்ப்பாதுகாவலர் ஐரோப்பாவில் யூதர்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகக் குற்றச்சாட்டு; பிரித்தானியாவில் ஒருவர் குற்றவாளியாகத் தீர்ப்பு!

ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியேவின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியதாகக் கூறப்படும் மொஹமட் அல்ஃபாதிஹ் நைம் என்பவர், பிரித்தானியாவின் பேர்மிங்ஹாம் நகரில் வசித்துக்கொண்டு ஐரோப்பாவில் யூதர்கள் மற்றும் இஸ்ரேலிய இலக்குகளைக் குறிவைத்து பாரிய தாக்குதல்களைத் திட்டமிட்டதாக ஜேர்மனி குற்றஞ்சாட்டியுள்ளது.

40 வயதான மொஹமட் அல்ஃபாதிஹ் நைம், பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை ஐரோப்பிய நாடுகளுக்கு எடுத்துச் சென்றதாகவும், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய வலையமைப்பில் முக்கிய பங்கு வகித்ததாகவும் ஜேர்மன் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பிரித்தானியாவில் வசித்து வருவதுடன், மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் பேர்மிங்ஹாமின் Kings Heath பகுதியில் குடியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் தாக்குதல் திட்டம் தொடர்பான குற்றச்சாட்டு

ஜேர்மன் வழக்கறிஞர்களின் குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஆண்டு ஜூலை 28ஆம் திகதி பேர்லினில் உள்ள Hasenheide Park பகுதியில் ஐந்து துப்பாக்கிகளைப் பெற்றுக்கொண்டதாக அல்ஃபாதிஹ் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 1ஆம் திகதி அந்த ஆயுதங்களை வியன்னாவுக்கு எடுத்துச் சென்று, அங்குள்ள சேமிப்பகமொன்றில் மறைத்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆயுதங்களுடன் அடையாளத்தை மறைப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய தொப்பி, தாவணி மற்றும் கையுறைகள் போன்ற பொருட்களையும் அவர் வைத்திருந்ததாகக் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 25ஆம் திகதி மீண்டும் பேர்லினுக்குச் சென்றபோது, போலியான கிரேக்க அடையாள ஆவணம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் வைத்திருந்தமை சுங்க அதிகாரிகளால் கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் மாலை, தாக்குதல் திட்டத்திற்காகத் தேவையான வெடிமருந்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக மற்றொரு சந்தேகநபரைச் சந்தித்ததாகவும் ஜேர்மன் விசாரணையாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இந்தக் குழுவின் இலக்குகளாக இஸ்ரேலிய இராஜதந்திரிகள், யூத சமூக மையங்கள் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் ஆகியவை இருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், ஹமாஸின் இராணுவப் பிரிவான அல்-கஸ்ஸாம் படையணியின் சார்பில் தாக்குதலுக்குப் பின்னர் வெளியிடுவதற்காக முன்கூட்டியே ஒரு காணொளியைப் பதிவு செய்ததாகவும் ஜேர்மன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அந்தக் காணொளியில் முகமூடி அணிந்து, ஆயுதங்களுடன் ஹமாஸ் கொடியின் முன்னால் தோன்றிய அவர், காஸாவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்குப் பழிவாங்குவதாகக் குறிப்பிட்டதாக ஜேர்மன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தக் காணொளி அல்ஃபாதிஹின் வீட்டிலிருந்து பிரித்தானியப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட SD அட்டையிலிருந்து மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் ஏழு பேர் கைது

இந்த ஆயுத வலையமைப்பு தொடர்பான விசாரணையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 1ஆம் திகதி ஜேர்மனியில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் இரண்டு ஜேர்மனியர்கள், ஒருவர் டென்மார்க் நாட்டவர், ஒருவர் பல்கேரியர் மற்றும் மூன்று லெபனான் நாட்டவர்கள் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்புடைய ஆயுதக் களஞ்சியத்தில் தானியங்கி துப்பாக்கி ஒன்று, Glock 26 ரக அரைத் தானியங்கி கைத்துப்பாக்கிகள் எட்டு மற்றும் 600 இற்கும் அதிகமான தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த வலையமைப்பு ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடையதாகவும், தாக்குதல்களைத் தயார்படுத்தியதாகவும் ஜேர்மன் வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிரித்தானியாவில் வேறு வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பு

இதற்கிடையில், அல்ஃபாதிஹ் கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தனது வீட்டிற்கு வந்த கடன் வசூல் அதிகாரி Kevin Bucknall என்பவரை கத்தியால் தாக்கிய சம்பவம் தொடர்பான வழக்கில் பேர்மிங்ஹாம் நீதிமன்றத்தால் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார்.

கடன் நிலுவை காரணமாக அவரது மனைவியின் சொத்துகளை மீட்பதற்காக குறித்த அதிகாரி வீட்டிற்கு வந்தபோது இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட காணொளிகளின்படி, குறித்த அதிகாரி தனது வாகனத்திற்குள் பின்வாங்கிய பின்னர், அல்ஃபாதிஹ் இரண்டு சமையலறைக் கத்திகளுடனும் கல்லுடனும் அவரை நோக்கிச் சென்றதாக அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அவர் கல்லால் வாகனத்தின் சாரதி பக்கக் கண்ணாடியை உடைத்து, கத்தியால் தாக்கியதில் அதிகாரியின் தலையில் 1–2 சென்ரிமீற்றர் அளவிலான காயம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் காயப்படுத்துதல், கூரிய ஆயுதம் வைத்திருந்தமை தொடர்பான இரண்டு குற்றச்சாட்டுகள் மற்றும் சொத்துச் சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளில் அல்ஃபாதிஹ் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். ஆனால், கொலை நோக்கத்துடன் காயப்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கான தண்டனை பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. பிரித்தானியாவில் விதிக்கப்படும் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னர், ஜேர்மனிக்கு நாடு கடத்தப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காப்புக்காகவே தாக்கியதாக நீதிமன்றத்தில் வாதம்

நீதிமன்ற விசாரணையின்போது, தாம் தற்காப்புக்காகவே குறித்த அதிகாரியைத் தாக்கியதாக அல்ஃபாதிஹ் தெரிவித்துள்ளார்.

காஸாவில் தனது சகோதரர் உயிரிழந்த செய்தி கிடைத்த மறுநாளே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாகவும், தனது குடும்பத்தைப் பாதுகாக்கவே முயன்றதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், காஸாவில் வளர்ந்த காலத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரால் இரண்டு முறை காலில் சுடப்பட்டதாகவும், 2010ஆம் ஆண்டு எகிப்தில் 25 நாட்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது தரப்பு சாட்சியாக ஆஜரான உளவியல் நிபுணர் ஒருவர், அல்ஃபாதிஹ் தனது வாழ்க்கை அனுபவங்களின் விளைவாகப் பிந்தைய மனஅழுத்தக் கோளாறால் (PTSD) பாதிக்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், அரச தரப்பு சட்டத்தரணி, அவரிடம் கைப்பற்றப்பட்ட தொலைபேசிகளில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய பல்வேறு தகவல்கள் காணப்பட்டதாகவும், அவர் ஹமாஸ் தலைவரின் மெய்ப்பாதுகாவலராகப் பணியாற்றியதற்கான புகைப்பட ஆதாரங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக பிரித்தானிய உள்துறை அமைச்சின் பேச்சாளர், பயங்கரவாதத் தாக்குதல்களை முன்னெடுக்க அல்லது அதற்கு உதவுபவர்களுக்கு பிரித்தானிய சமூகத்தில் இடமில்லை எனத் தெரிவித்துள்ளார். மேலும், ஹமாஸ் அமைப்பு பிரித்தானியாவில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore