லாஃப்ஸ் (LAUGFS) சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சிற்றுண்டிகள், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டி ஆகியவற்றின் விலைகளை உயர்த்த அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கமைய, சிற்றுண்டிகளின் விலையை 5 ரூபாவினாலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்து ரொட்டியின் விலையை 15 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் ஹர்ஷண ருக்ஷான் தெரிவித்துள்ளார்.
லாஃப்ஸ் நிறுவனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சமையல் எரிவாயுவின் விலைகளை அதிகரித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோகிராம் நிறையுடைய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1,775 ரூபாவினாலும், 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 732 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயுவின் விலை உயர்வைத் தொடர்ந்து உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதால், உணவகங்களில் உணவு வாங்கும் பொதுமக்களின் செலவினங்களும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.





