நுவரெலியா சுற்றுலா விடுதியில் பெண் கொலை; தப்பியோடிய காதலன் 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில்!

நுவரெலியா, மாகஸ்தோட்ட பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியொன்றில் 27 வயதுடைய பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள அவரது காதலனை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய நுவரெலியா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படும் 27 வயதுடைய நபர், தெரிபஹா பகுதியைச் சேர்ந்தவராவார்.

சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த சந்தேகநபர் தெரிபஹா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். எனினும், பொலிஸ் காவலில் இருந்தபோது கைவிலங்குடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து பொலிஸாரால் தீவிரமாகத் தேடப்பட்டு வந்த அவர், கடந்த 12ஆம் திகதி இரவு சுமார் 11.30 மணியளவில் நுவரெலியா பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைவிலங்குடன் மதுபோதையில் சுற்றித்திரிந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, அவர் மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் நஞ்சுப் போத்தல் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

48 மணிநேர தடுப்புக்காவலில் விசாரணை

ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னர், சந்தேகநபர் நேற்று (13) நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காக அவரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்க அனுமதி வழங்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், சந்தேகநபரை 48 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கியதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore