தண்டப்பணம் வருமானமாக மட்டும் இருக்கக்கூடாது; குற்றத்தடுப்புக்கும் நிதி ஒதுக்கப்பட வேண்டும் – காலித் வலியுறுத்தல்!

சம்மாந்துறை பிரதேசத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், அவற்றைத் தடுப்பதற்குமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளைப் பிரதேச சபை முன்னெடுக்க வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் காலித் வலியுறுத்தியுள்ளார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு கடந்த நவம்பர் 10ஆம் திகதி நடைபெற்றது. இதன்போது, எதிர்வரும் நிதியாண்டுக்கான வரவு–செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் கிடைத்த முத்திரைத் தீர்வை மற்றும் நீதிமன்றத் தண்டப்பண வருமானங்களின் அடிப்படையில், எதிர்வரும் நிதியாண்டில் சபைக்கு சுமார் 50 மில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

நீதிமன்றத் தண்டப்பணங்கள் மூலம் சபைக்குக் கிடைக்கும் வருமானம் நிதி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தாலும், இவ்வாறான தண்டப்பணங்கள் கிடைப்பதற்குப் பின்னணியில் பிரதேசத்தில் குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றமை குறித்தும் கவனம் செலுத்த வேண்டுமென அவர் குறிப்பிட்டார்.

எனவே, தண்டப்பண வருமானத்தில் ஒரு பகுதியைக் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஒதுக்கீடு செய்து, பொதுமக்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், இளைஞர்களுக்கான வழிகாட்டல் செயற்பாடுகள் மற்றும் சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் முன்மொழிந்தார்.

வருமானம் ஈட்டுவதை மாத்திரம் நோக்கமாகக் கொள்ளாமல், அந்த வருமானம் கிடைக்கக் காரணமாக அமையும் சமூகப் பிரச்சினைகளைக் குறைப்பதற்கும் பிரதேச சபை உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் மேலும் வலியுறுத்தினார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore