உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் – ஹாதிக் கோரிக்கை!

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு கடந்த 10ஆம் திகதி பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போது, வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர் ஹாதிக் இப்ராஹிம், அபிவிருத்தி மற்றும் சமூக நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் 23 உறுப்பினர்களுக்கும் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய வட்டாரங்களுக்கான சமூக நலத்திட்ட நிதி ஒதுக்கீடுகள் சமமான முறையில் பகிர்ந்தளிக்கப்படாத நிலை காணப்பட்டதாகச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்வரும் ஆண்டுகளில் இத்தகைய நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

சிறுவர் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள், பொது இடங்களை அழகுபடுத்துதல், இயந்திரங்கள் மற்றும் தளபாடங்களைக் கொள்வனவு செய்தல் உள்ளிட்ட அபிவிருத்தித் திட்டங்களிலும் அனைத்து உறுப்பினர்களினதும் கோரிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்றார்.

கடந்த ஒன்றரை வருட காலமாக உறுப்பினர்களின் கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு உரிய கவனம் செலுத்தப்படாத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களின் நலனுக்காகவே அனைவரும் சபைக்கு வந்துள்ளோம் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, எந்த வட்டாரத்தில் எப்போது, யாருடைய கோரிக்கையின் அடிப்படையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பில் அனைத்து உறுப்பினர்களுக்கும் தெளிவான தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேவேளை, கடந்த காலங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட வீதிகளை அபிவிருத்திப் பணிகளுக்காக அடையாளப்படுத்தியமை பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்ட அவர், வீதிகள், வடிகால்கள் மற்றும் ஏனைய அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கும்போது உறுப்பினர்களுடன் கலந்தாலோசித்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

நான்கு வருட பதவிக்காலத்தில் உறுப்பினர்களுக்கிடையே தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படாமல், ஒருமித்த கருத்துடன் சபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு உறுப்பினரினதும் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இறுதியாக, தாம் முன்வைத்த கோரிக்கைகள் எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என வலியுறுத்திய அவர், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு பூரண ஆதரவைத் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore