தொலைக்காட்சியில் மனைவி குழந்தைகளைக் கொன்றதாக அறிந்த தந்தை!

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாநிலத்தில், 1994ஆம் ஆண்டு தனது இரண்டு இளம் மகன்களையும் கொலை செய்த குற்றத்திற்காகச் சிறையில் உள்ள முன்னாள் மனைவியை, வாழ்நாள் முழுவதும் சிறையில் வைத்திருக்க வேண்டும் என அவர்களின் தந்தை டேவிட் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

தனது இரண்டு மகன்களான மைக்கேல் மற்றும் அலெக்சாண்டர் ஆகியோரின் மரணத்தால் ஏற்பட்ட துயரத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் தவிக்கும் அவர், முன்னாள் மனைவி சூசன் ஸ்மித்தின் விடுதலைக்கு எதிராக மீண்டும் குரல் கொடுக்கத் தயாராகியுள்ளார்.

தெற்கு கரோலினாவின் யூனியன் கவுண்டியில் 1994ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. அப்போது மைக்கேலுக்கு மூன்று வயதும், அலெக்சாண்டருக்கு 14 மாதங்களுமே ஆகியிருந்தன.

குழந்தைகள் கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய்

1994ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி, போக்குவரத்து சமிக்ஞை விளக்கில் வாகனத்தை நிறுத்தியிருந்தபோது, கறுப்பினத்தைச் சேர்ந்த ஒருவர் தனது காரைக் கடத்திச் சென்றதாகவும், காரின் பின்புற இருக்கையில் இருந்த தனது இரண்டு குழந்தைகளையும் கடத்திச் சென்றதாகவும் சூசன் ஸ்மித் பொலிஸாரிடம் தெரிவித்திருந்தார்.

இந்தத் தகவல் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குழந்தைகளைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டதுடன், நாடு முழுவதும் தகவல்கள் பகிரப்பட்டன. பொதுமக்களும் தேடுதல் நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

குழந்தைகள் காணாமல் போன ஒன்பது நாட்களிலும் டேவிட் ஸ்மித் தனது மனைவிக்கு அருகில் இருந்து ஊடகச் சந்திப்புகளில் பங்கேற்றார். இருவரும் கைகளைப் பற்றிக்கொண்டு குழந்தைகள் பாதுகாப்பாகத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், நவம்பர் 3ஆம் திகதி விசாரணைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து சூசன் ஸ்மித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

தனது இரண்டு மகன்களையும் காரின் குழந்தை இருக்கைகளில் அமர்த்திய பின்னர், காரை நியூட்ரல் நிலையில் வைத்து, தெற்கு கரோலினாவின் யூனியன் கவுண்டியில் அமைந்துள்ள ஜோன் டி. லோங் ஏரிக்குள் உருண்டு செல்ல அனுமதித்ததாக அவர் தெரிவித்திருந்தார்.

பொய்யான கடத்தல் கதையை வெளிப்படுத்திய போக்குவரத்து சமிக்ஞை

விசாரணையின் ஆரம்பத்தில் பொலிஸார் சூசன் ஸ்மித்தின் கதையை நம்பியிருந்தனர். அவர் கூறிய கடத்தல்காரரின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு உருவப்படமும் தயாரிக்கப்பட்டு நாடு முழுவதும் தேடுதல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஆனால், விசாரணையின் போது அவரது வாக்குமூலத்தில் பல முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.

குறிப்பாக, குழந்தைகள் கடத்தப்பட்டதாக அவர் கூறிய சந்திப்பில் இருந்த போக்குவரத்து சமிக்ஞை விளக்கின் செயல்பாடு அவரது கதைக்கு முரணாக இருந்தது.

அந்தச் சந்திப்பில், அவர் பயணித்த திசையில் உள்ள வாகனங்களுக்கான சமிக்ஞை விளக்கு பச்சையாகவே இருக்கும்படி அமைக்கப்பட்டிருந்தது. குறுக்குப் பாதையில் வாகனம் வந்தால் மட்டுமே அது மாறும் என விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், அவர் மேற்கொண்ட பொய் கண்டறியும் சோதனையிலும் தோல்வியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறான முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணையாளர்கள் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

இந்தப் பொய்யான கடத்தல் குற்றச்சாட்டு அப்பகுதியிலுள்ள கறுப்பின மக்கள்மீது சந்தேகத்தை ஏற்படுத்தியதுடன், சமூக உறவுகளிலும் பதற்றத்தை உருவாக்கியதாக யூனியன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் தலைமைப் பிரதி அதிகாரி ஸ்கொட் காஃபர் தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒப்புதல் வாக்குமூலம்

சூசன் ஸ்மித் தனது குற்றத்தை ஒப்புக்கொண்ட செய்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, டேவிட் ஸ்மித் தனது மனைவியின் பெற்றோர் வீட்டில் இருந்துள்ளார்.

தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்த அவர், தனது மனைவியே குழந்தைகளைக் கொன்றதாகக் கூறியதை நம்ப முடியாமல் அதிர்ச்சியடைந்தார்.

அந்த அதிர்ச்சியில் வீட்டின் பின்புறக் கதவு வழியாக வெளியேறி அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் ஓடியதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

“எனது குழந்தைகளைக் கொன்றது என் மனைவிதான் என்பதை நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பில்தான் அறிந்துகொண்டேன். நான் அவளை நம்பியிருந்தேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் சூசன் ஸ்மித் இரண்டு கொலைக் குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டார். அவருக்கு 30 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரையிலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

32 ஆண்டுகளுக்குப் பின்னரும் ஆறாத துயரம்

குழந்தைகள் உயிரிழந்தபோது டேவிட் ஸ்மித்துக்கு 23 வயதே இருந்தது. தற்போது 56 வயதாகும் அவர், தனது மகன்கள் இன்று உயிருடன் இருந்திருந்தால் முப்பது வயதைக் கடந்தவர்களாக இருந்திருப்பார்கள் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிறார்.

அவரது நினைவில் மைக்கேலும் அலெக்சாண்டரும் இன்னும் சிறு குழந்தைகளாகவே இருக்கின்றனர்.

“மக்கள் இன்று அவர்கள் எத்தனை வயதாகியிருப்பார்கள் என்று கேட்கிறார்கள். என்னால் அதைக் கணக்கிட்டுப் பார்க்க முடியவில்லை. எனது மனதில் அவர்கள் எப்போதும் மூன்று வயதும் 14 மாதங்களும் கொண்ட குழந்தைகளாகவே இருக்கிறார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் உயிரிழந்த பின்னர் ஏரிக்குச் செல்வதைத் தவிர்த்து வருவதாகவும், அந்த இடம் அவர்களுக்கு நேர்ந்த துயரத்தை நினைவூட்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

குழந்தைகளின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னத்தின் அருகில், இன்றும் பொதுமக்கள் விளையாட்டுப் பொம்மைகள், சிறிய லொறிகள், வண்ணப் பென்சில்கள் மற்றும் கரடி பொம்மைகளை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னாள் மனைவியின் விடுதலைக்கு எதிர்ப்பு

சூசன் ஸ்மித் கடந்த மூன்று தசாப்தங்களாகச் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகிறார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பரோல் விடுதலை விசாரணையிலும் அவர் விடுதலை கோரியிருந்தார். எனினும், பரோல் சபை உறுப்பினர்கள் ஒருமனதாக அந்தக் கோரிக்கையை நிராகரித்தனர்.

அந்த விசாரணையின்போது, தான் செய்தது மிகக் கொடூரமான செயல் என்றும், கடந்த காலத்தை மாற்ற முடிந்தால் மாற்றியிருப்பேன் என்றும் சூசன் ஸ்மித் தெரிவித்திருந்தார். சிறையில் இருந்தபோது செய்த தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகவும் அவர் கூறியிருந்தார்.

அவரது வழக்கறிஞர், சிறுவயது முதல் மனநலப் பிரச்சினைகளால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், இரண்டாவது குழந்தை பிறந்த பின்னர் பிரசவத்திற்குப் பிந்தைய மனச்சோர்வை எதிர்கொண்டதாகவும் 2024ஆம் ஆண்டு விசாரணையில் வாதிட்டிருந்தார். அக்காலத்தில் நிலவிய சமூகக் களங்கம் காரணமாக அவர் உரிய சிகிச்சை பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் நடைபெறவுள்ள பரோல் விசாரணையில் சூசன் ஸ்மித்தின் விடுதலைக்கு எதிராக டேவிட் ஸ்மித் கருத்துத் தெரிவிக்கவுள்ளார்.

“32 ஆண்டுகள் கடந்துவிட்டன என்றாலும், எனக்கு அது நேற்றுதான் நடந்ததைப் போல இருக்கிறது. இந்தத் துயரம் இன்னும் மாறவில்லை. எனக்குத் தெரிவு வழங்கப்பட்டால், அவள் இறக்கும் வரை சிறையில் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்” என அவர் தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினருடன் இணைந்து போராடும் தந்தை

டேவிட் ஸ்மித் பின்னர் மறுமணம் செய்துகொண்டதுடன், அவருக்கு தற்போது 25 மற்றும் 22 வயதுடைய மேலும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

தனது மகளின் பிறப்பின்போது, மீண்டும் ஒரு குழந்தையை இழந்துவிடுவோமோ என்ற அச்சம் தன்னை ஆட்கொண்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

தற்போதைய மனைவி டிஃபனி ஸ்மித், தமது குடும்பம் சூசன் ஸ்மித்தை மனதளவில் மன்னித்திருந்தாலும், நடந்த சம்பவங்களை மறந்துவிடவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

“மைக்கேலும் அலெக்சாண்டரும் தங்களது வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பைப் பெறவில்லை. பாடசாலையில் கல்வி கற்பது, உயர்தரப் படிப்பை முடிப்பது, குடும்பம் அமைப்பது போன்ற அனுபவங்களைக்கூட அவர்களால் பெற முடியவில்லை. அப்படியிருக்கும்போது, அவர்களைக் கொன்றவர் மீண்டும் வெளியே சென்று வாழ்க்கையைத் தொடர ஏன் வாய்ப்புப் பெற வேண்டும்?” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

வரவுள்ள பரோல் விசாரணையில் டேவிட் ஸ்மித்துடன் அவரது மனைவி, மகள் மற்றும் உறவினர்களும் பங்கேற்கவுள்ளனர். யூனியன் கவுண்டி ஷெரிப் அலுவலகத்தின் தலைமைப் பிரதி அதிகாரி ஸ்கொட் காஃபரும் சூசன் ஸ்மித்தின் விடுதலைக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளார்.

டேவிட் ஸ்மித் தனது முன்னாள் மனைவியுடன் குற்றத்தீர்ப்புக்குப் பின்னர் தொடர்புகொள்ளவில்லை. கடைசியாக அவரிடம் குழந்தைகளைக் கொன்றதற்கான காரணத்தைக் கேட்டபோது, “எனக்குத் தெரியாது” என்று அவர் பதிலளித்ததாக டேவிட் தெரிவித்துள்ளார்.

தற்போது நடைபெறவுள்ள ஒவ்வொரு பரோல் விசாரணையிலும் பங்கேற்கத் தீர்மானித்துள்ள டேவிட், தனது சட்டைப் பகுதியில் மைக்கேல் மற்றும் அலெக்சாண்டரின் சிறிய புகைப்படம் ஒன்றை அணிந்துகொண்டு செல்லவுள்ளார்.

குழந்தைகள் காணாமல் போன காலத்தில் அவர்களை மீண்டும் கண்டுபிடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் அந்தப் புகைப்படத்தை ஏந்தியிருந்த அவர், இப்போது அவர்களை யாரும் மறந்துவிடக் கூடாது என்பதற்காக அதனைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore