மெக்சிகோவின் ஆரம்பகால மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் கும்பல்களில் ஒன்றை உருவாக்கியவரும், அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு முகவர் கொலை வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டவருமான மிகுவல் ஏஞ்சல் ஃபெலிக்ஸ் கல்லார்டோ தனது 80ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
மெக்சிகோவின் பாதுகாப்பு அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவர் உயிரிழந்துள்ளார்.
உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மேற்கு மெக்சிகோவின் ஜலிஸ்கோ மாநிலத் தலைநகரான குவாடலஹாராவில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் மாற்றப்பட்டிருந்தார். அங்கு பல உடல் உறுப்புகள் செயலிழந்ததைத் தொடர்ந்து அவர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1970களில் உருவான போதைப்பொருள் பேரரசு
1946ஆம் ஆண்டு மெக்சிகோவின் சினலோவா மாநிலத்திலுள்ள குலியாகான் நகரில் பிறந்த ஃபெலிக்ஸ் கல்லார்டோ, ஆரம்பத்தில் பொலிஸ் அதிகாரியாகவும் பின்னர் மாநில ஆளுநர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியாகவும் பணியாற்றினார்.
அதன்பின்னர் குற்ற உலகில் நுழைந்த அவர், 1970கள் மற்றும் 1980களில் மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பில் முக்கிய நபராக உருவெடுத்தார்.
‘போதைப்பொருள் கும்பல்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவர்’ (The Boss of Bosses) என அழைக்கப்பட்ட அவர், குவாடலஹாரா போதைப்பொருள் கடத்தல் கும்பலை உருவாக்கியவர்களில் முக்கியமானவராகக் கருதப்படுகிறார்.
அவரது தலைமையில், மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்கு பெருமளவில் கொக்கைன் கடத்தும் நடவடிக்கைகள் விரிவடைந்தன. மேலும், கொலம்பியாவின் போதைப்பொருள் கடத்தல் தலைவர்களுடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்தினார்.
குறிப்பாக, பாப்லோ எஸ்கோபார் தலைமையிலான மெடலின் போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் கூட்டணி அமைத்தது அவரது கடத்தல் வலையமைப்பின் விரிவாக்கத்திற்கு உதவியது.
அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கி பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வது மற்றும் கண்டங்களுக்கு இடையில் போதைப்பொருட்களைக் கொண்டு செல்வதற்கு இலகு விமானங்களைப் பயன்படுத்துவது போன்ற உத்திகளும் அவரது வலையமைப்பின் வளர்ச்சிக்கு உதவியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு அதிகாரி கொலை வழக்கு
ஃபெலிக்ஸ் கல்லார்டோவின் பெயர் சர்வதேச அளவில் அதிகம் பேசப்படுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது 1985ஆம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க போதைப்பொருள் தடுப்பு நிர்வாகத்தின் (DEA) முகவர் என்ரிக் ‘கிகி’ கமரேனா கொலைச் சம்பவமாகும்.
1985ஆம் ஆண்டு கமரேனா கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில், மெக்சிகோ விமானி அல்ஃப்ரெடோ சவாலா அவேலரும் கொல்லப்பட்டிருந்தார்.
இந்தச் சம்பவம் அமெரிக்காவுக்கும் மெக்சிகோவுக்கும் இடையில் இராஜதந்திரப் பதற்றத்தை ஏற்படுத்தியது. சம்பவத்துடன் தொடர்புடையவர்களைக் கைது செய்யுமாறு அமெரிக்கா மெக்சிகோ அரசாங்கத்திற்கு கடும் அழுத்தம் கொடுத்தது.
1989ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் கல்லார்டோவுக்கு, குவாடலஹாரா கும்பலுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் ஏற்கெனவே சிறையில் இருந்தபோதும், கமரேனா மற்றும் விமானி கொலை தொடர்பாகத் தனியான வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
2017ஆம் ஆண்டு அந்த வழக்கில் குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்ட அவருக்கு மேலும் 37 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், கொலைகளுக்குத் தான் பொறுப்பல்ல என அவர் தொடர்ந்து மறுத்து வந்தார்.
சிறையில் மோசமடைந்த உடல்நிலை
1989ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெலிக்ஸ் கல்லார்டோ, மேற்கு ஜலிஸ்கோ மாநிலத்திலுள்ள உயர் பாதுகாப்புச் சிறையில் தண்டனையை அனுபவித்து வந்தார்.
அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததைச் சுட்டிக்காட்டி, வீட்டுக் காவலுக்கு மாற்றுமாறு அவரது வழக்கறிஞர்கள் பலமுறை கோரிக்கை விடுத்திருந்தனர்.
2021ஆம் ஆண்டு சிறையில் இருந்து ஸ்பானிய மொழி தொலைக்காட்சி வலையமைப்பான Telemundo-வுக்கு வழங்கிய நேர்காணலின்போது, அவர் ஒரு கண்ணில் பார்வையை இழந்திருந்ததுடன், கேட்கும் திறனும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. மேலும், பிறரின் உதவியின்றி நடக்க முடியாத நிலையிலும் இருந்தார்.
அந்த நேர்காணலில், “32 ஆண்டுகள் கடந்துவிட்டன. குற்றம் செய்யாத ஒரு மனிதனுக்கு அது மிக நீண்ட காலம்” எனக் கூறிய அவர், தனது குற்றமற்ற தன்மையை மீண்டும் வலியுறுத்தியிருந்தார்.
மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் வரலாற்றில் தாக்கம்
ஃபெலிக்ஸ் கல்லார்டோவின் எழுச்சியும் வீழ்ச்சியும் மெக்சிகோவின் நவீன போதைப்பொருள் கடத்தல் வரலாற்றில் முக்கியமான அத்தியாயமாகக் கருதப்படுகிறது.
அவரது காலத்தில் உருவான பிராந்திய ஆதிக்கப் போட்டிகளும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளும் பின்னர் பல்வேறு கும்பல்களுக்கிடையிலான மோதல்களுக்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. இத்தகைய மோதல்கள் பல தசாப்தங்களாக மெக்சிகோவில் பெருமளவிலான உயிரிழப்புகளுக்கும் காணாமல் போதல்களுக்கும் காரணமாகியுள்ளன.
அவரது வாழ்க்கை மற்றும் குற்ற உலகில் ஏற்பட்ட எழுச்சி, 2018ஆம் ஆண்டு வெளியான Netflix தொடரான Narcos: Mexico மூலம் திரையிலும் சித்தரிக்கப்பட்டது. அதில் மெக்சிகோ நடிகர் டியேகோ லூனா, ஃபெலிக்ஸ் கல்லார்டோவின் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
மெக்சிகோவின் போதைப்பொருள் கடத்தல் வரலாற்றில் பெரும் செல்வாக்குச் செலுத்தியவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட ஃபெலிக்ஸ் கல்லார்டோவின் மரணம், பல தசாப்தங்களாகச் சிறையில் கழித்த அவரது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.





