தென் கொரியாவில் சான்றளிக்கப்பட்ட வரிக் கணக்கியல் தகுதிப் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலிடம் பெற்ற 34 வயதுடைய ஹான் வொன்-சியோக் என்பவர், சிறிய கமரா, ஸ்மார்ட்போன் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பரீட்சையில் மோசடி செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த பரீட்சையின் முதலாம் சுற்றில் 400 புள்ளிகளுக்கு 397.5 புள்ளிகளைப் பெற்ற அவர், மொத்தம் 160 வினாக்களில் 159 வினாக்களுக்கு சரியான பதில்களை வழங்கியிருந்தார். அவரது அசாதாரணமான பெறுபேறு தொடர்பில் சந்தேகங்களும் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விவாதங்களும் எழுந்திருந்தன.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தனது வழக்கறிஞர் லீ டொன்-ஹோவின் YouTube அலைவரிசையில் வெளியிடப்பட்ட காணொளி மூலம் ஹான் தனது மோசடியை ஒப்புக்கொண்டுள்ளார்.
AI மூலம் வினாக்களுக்குப் பதிலளித்த முறை
பரீட்சையின் இரண்டு சுற்றுகளிலும் மின்னணு சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை வினாத்தாள்களில் இடம்பெற்ற கேள்விகளை சிறிய கமரா மூலம் புகைப்படம் எடுத்து, அந்தப் படங்களை AI அமைப்புக்கு அனுப்பியுள்ளார். பின்னர் AI வழங்கிய பதில்களைத் தனது ஸ்மார்ட்போன் மூலம் பார்த்து பரீட்சையில் பதிலளித்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆரம்பத்தில் தன் மீதான மோசடிக் குற்றச்சாட்டுகளை அவர் மறுத்திருந்தார். எனினும், பின்னர் பரீட்சையில் இரண்டாவது இடத்தைப் பெற்றவருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து சிந்தித்ததையடுத்து உண்மையை ஒப்புக்கொள்ளத் தீர்மானித்ததாகக் கூறியுள்ளார்.
நேர்மையான முறையில் பரீட்சையில் சித்தியடைந்த ஏனைய விண்ணப்பதாரர்களிடமும் அவர் மன்னிப்புக் கோரியுள்ளார்.
ஐந்து ஆண்டுகள் பரீட்சை எழுதத் தடை
இந்த ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, தென் கொரியாவின் வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் அமைச்சும் மனிதவள அபிவிருத்திச் சேவையும் அவசரக் கூட்டமொன்றை நடத்தி சம்பவம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளன.
செயற்கை நுண்ணறிவு அல்லது ஏனைய தொழில்நுட்பச் சாதனங்களைப் பயன்படுத்தி பரீட்சையில் மோசடி செய்தது உறுதிப்படுத்தப்படும் விண்ணப்பதாரர்களின் தகுதிகள் இரத்துச் செய்யப்படும் என்றும், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு மீண்டும் குறித்த பரீட்சையில் தோற்றுவதற்குத் தடை விதிக்கப்படும் என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மேலும், ஹானின் வழக்கறிஞர் ஊடாகப் பெறப்பட்ட எழுத்துமூல ஒப்புதல் வாக்குமூலத்தைத் தொடர்ந்து, சியோல் பெருநகர பொலிஸ் நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
பணம் சம்பாதிக்கவும் பெற்றோரின் பெருமையைப் பெறவும் முயற்சி
தனக்கு பணம் சம்பாதிக்கவும், பெற்றோர் பெருமைப்படக்கூடிய ஒரு தொழிலைப் பெற்றுக்கொள்ளவும் விரும்பியதாலேயே இவ்வாறு மோசடியில் ஈடுபட்டதாக ஹான் தெரிவித்துள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.
தென் கொரியாவில் கடுமையான போட்டி நிலவும் தொழில்முறைத் தகுதிப் பரீட்சைகளில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்யக்கூடிய புதிய வழிமுறைகள் குறித்து இந்தச் சம்பவம் மீண்டும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தொழில்நுட்ப வளர்ச்சி பரீட்சை முறைகளின் நம்பகத்தன்மைக்கும் நேர்மைக்கும் புதிய சவால்களை உருவாக்கி வருவதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.





