சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC), 2035ஆம் ஆண்டு வரையிலான முக்கிய ஆடவர் சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணையை அங்கீகரித்துள்ளதுடன், 2028ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட்டைச் சேர்ப்பதற்கான தகுதிச் சுற்று முறைகளையும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்மானங்கள் இந்தோனேசியாவின் பாலி நகரில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 15) நடைபெற்ற ICC நிர்வாகக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன.
2028 முதல் 2031 வரை முக்கிய தொடர்கள்
அங்கீகரிக்கப்பட்ட அட்டவணையின்படி, 2028ஆம் ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர் ஒக்டோபர் 12ஆம் திகதி முதல் நவம்பர் 12ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது.
2029ஆம் ஆண்டுக்கான சம்பியன்ஸ் கிண்ணத் தொடரை இந்தியா ஒக்டோபர் 9ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை நடத்தவுள்ளது.
2030ஆம் ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரை இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளன.
அதேவேளை, 2031ஆம் ஆண்டுக்கான ஒருநாள் சர்வதேச உலகக் கிண்ணத் தொடரை இந்தியா மற்றும் பங்களாதேஷ் இணைந்து நடத்தவுள்ளன.
மேலும், 2029 மற்றும் 2031ஆம் ஆண்டுகளுக்கான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளை நடத்தும் பொறுப்பும் இங்கிலாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
2028 ஒலிம்பிக் கிரிக்கெட் தகுதிச் சுற்று
2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கான இறுதித் தகுதிச் சுற்றுப் போட்டிகள் பங்களாதேஷ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளதாக ICC அறிவித்துள்ளது.
இதன்படி, ஆடவர் பிரிவுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் 2028ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி முதல் 13ஆம் திகதி வரை பங்களாதேஷில் நடைபெறவுள்ளன.
மகளிர் பிரிவுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் பெப்ரவரி 26ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை அமெரிக்காவில் நடைபெறவுள்ளன.
இரு போட்டித் தொடர்களிலும் தலா எட்டு அணிகள் பங்கேற்கும். அவை தலா நான்கு அணிகளைக் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பெறும் அணிகள் இறுதிப் போட்டியில் மோதும். அந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி இடத்தைப் பெற்றுக்கொள்ளும்.
2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தகுதிப் போட்டி
2027ஆம் ஆண்டு ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான தகுதிப் போட்டியையும் ICC அங்கீகரித்துள்ளது.
2027ஆம் ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள இத்தகுதிப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. மொத்தம் 23 போட்டிகள் நடைபெறவுள்ளதுடன், அதில் நான்கு அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறும்.
2028 T20 உலகக் கிண்ணத் தகுதிமுறை
2028ஆம் ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடரின் உலகளாவிய தகுதிச் சுற்றில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன. 2028ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நடைபெறவுள்ள இப்போட்டியில் மொத்தம் 31 ஆட்டங்கள் இடம்பெறும்.
இந்தத் தகுதிச் சுற்றின் மூலம் எட்டு அணிகள் உலகக் கிண்ணத் தொடருக்குத் தகுதி பெறும். பிராந்திய பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதுடன், அணிகளின் போட்டித் திறனுக்கும் முக்கியத்துவம் வழங்கும் வகையில் புதிய தகுதிமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக ICC தெரிவித்துள்ளது.
மகளிர் 2028 T20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிமுறையிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிராந்தியத் தகுதிப் போட்டிகளில் இருந்து எட்டு அணிகள் உலகளாவிய தகுதிச் சுற்றுக்குத் தெரிவாகும். ஏற்கனவே நெதர்லாந்து மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் அந்தச் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.
உலகளாவிய தகுதிச் சுற்றில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடரில் எஞ்சியுள்ள இடங்களைப் பெற்றுக்கொள்ளும்.
2032, 2034 மற்றும் 2035 தொடர்களும் அட்டவணையில்
இதற்கிடையில், 2032 மற்றும் 2034ஆம் ஆண்டுகளுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணத் தொடர்கள் மற்றும் 2035ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான காலப்பகுதிகளையும் ICC உறுதிப்படுத்தியுள்ளது.
எனினும், இந்தத் தொடர்களை நடத்தவுள்ள நாடுகள் தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.
ICC பிரதம நிறைவேற்று அதிகாரி சஞ்சோக் குப்தா கருத்துத் தெரிவிக்கையில், இந்தத் தீர்மானங்கள் வீரர்கள் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு எதிர்காலத் திட்டமிடலில் தெளிவை வழங்குவதுடன், கிரிக்கெட் வளர்ச்சித் திட்டங்கள் மற்றும் சர்வதேசப் போட்டிகளையும் வலுப்படுத்தும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
2035ஆம் ஆண்டு வரையிலான போட்டி அட்டவணையை முன்கூட்டியே அறிவித்துள்ளதன் மூலம், அடுத்துவரும் ஆண்டுகளில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளைத் திட்டமிடுவதற்கான முக்கிய வழிகாட்டுதலை ICC வழங்கியுள்ளது.





