ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான பாதுகாப்பு சூழ்நிலையை முன்னிட்டு, குவைத் அரசு தனது வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளது.
Gulf News வெளியிட்ட தகவலின்படி, பயணிகளின் பாதுகாப்பையும் விமானப் போக்குவரத்து பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில், அதிகாலை 4.50 மணி முதல் இந்த நடவடிக்கை அமல்படுத்தப்பட்டதாக குவைத் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, குவைத் நோக்கி வந்த மற்றும் அங்கிருந்து புறப்படவிருந்த பல விமானங்கள் முன்கூட்டியே செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் நடைமுறைகளின் அடிப்படையில் மாற்று விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
அமெரிக்கா அண்மையில் ஈரான் மீது நடத்திய தாக்குதல்களையும், அதற்கு பதிலடியாக அமெரிக்க இராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களையும் தொடர்ந்து வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், குவைத் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
பாதுகாப்பு நிலைமை சீரடைந்து, அச்சுறுத்தல்கள் நீங்கியதும் வான்வெளி மீண்டும் திறக்கப்படும் என DGCA தெரிவித்துள்ளது.
மேலும், பயணிகளும் விமான சேவை நிறுவனங்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. :





