உலகக் கிண்ண கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பின்னர், “Las Malvinas son Argentinas” (பாக்லாந்து தீவுகள் அர்ஜென்டினாவுக்கே சொந்தமானவை) என்ற அரசியல் வாசகமுடைய பதாகையை அர்ஜென்டினா வீரர்கள் ஏந்தி கொண்டாடிய சம்பவம் தொடர்பாக, FIFA தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, போட்டி நடுவரின் அறிக்கைகள் மற்றும் சம்பவத்தின் அனைத்து சூழ்நிலைகளையும் FIFA-வின் சுயாதீன ஒழுக்காற்றுக் குழு (Independent Disciplinary Committee) தற்போது ஆய்வு செய்து வருவதாக FIFA தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக BBC-க்கு கருத்து தெரிவித்த FIFA பேச்சாளர்,
“வழக்கமான நடைமுறையின்படி, போட்டி அறிக்கைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து விடயங்களும் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. FIFA ஒழுக்காற்று விதிமுறைகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும்.” என்று கூறியுள்ளார்.
இந்த பதாகை, தென் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள பாக்லாந்து (Falklands / Malvinas) தீவுகள் தொடர்பான பிரிட்டன் – அர்ஜென்டினா இடையிலான நீண்டகால உரிமைத் தகராறை மீண்டும் சர்வதேச கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.
இதனையடுத்து, அரசியல் செய்திகளுக்கு கால்பந்து மைதானத்தில் இடமில்லை எனக் குறிப்பிட்டுள்ள பிரித்தானிய அரசு, இந்த சம்பவம் தொடர்பாக FIFA விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.
FIFA ஒழுக்காற்று விதிகளின்படி, உத்தியோகபூர்வ போட்டிகளில் அரசியல், தூண்டுதல் அல்லது சர்ச்சைக்குரிய செய்திகள் மற்றும் சின்னங்களை வெளிப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.
– BBC





