நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை (CAA), “ஆவணங்கள் தேவையில்லை”, “பிணையாளர் தேவையில்லை”, “5 நிமிடங்களில் உடனடி கடன்” என விளம்பரப்படுத்தப்படும் ஆன்லைன் கடன் சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது.
CAA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இவ்வாறான மோசடி ஆன்லைன் கடன் திட்டங்கள் பொதுமக்களின் பணம், தனிப்பட்ட தகவல்கள் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஆன்லைன் கடன் மோசடிகளால் ஏற்படக்கூடிய ஆபத்துகள்:
மறைமுகக் கட்டணங்கள் காரணமாக கோரிய முழுத் தொகை கிடைக்காமல் போகலாம்.
அதிகளவிலான மற்றும் நியாயமற்ற வட்டி அறவிடப்படலாம்.
கைப்பேசியில் சேமிக்கப்பட்டுள்ள தனிப்பட்ட தகவல்கள் அனுமதியின்றி அணுகப்படலாம்.
தவணை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால் மிரட்டல், தொந்தரவு மற்றும் பிளாக்மெயில் செய்யப்படலாம்.
இதனால், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிதி நிறுவனங்களிலிருந்து மட்டுமே கடன் பெறுமாறும், அறிமுகமற்ற கடன் செயலிகளை (Loan Apps) பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறும் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இவ்வாறான ஆன்லைன் கடன் மோசடிகளுக்கு இலக்கானவர்கள் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது சைபர் குற்றப் புலனாய்வு பிரிவில் (Cyber Crime Investigation Division) முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.





