டெல்லி கேப்பிட்டல்ஸ் கிரிக்கெட் அணி வீரர் அபிஷேக் போரலை, பாலியல் வன்கொடுமை வழக்கில் உடனடியாக கைது செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வைத்தியக் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா தலைமையிலான அமர்வு, ஹூக்ளியில் உள்ள மக்ரா பொலிஸ் நிலையத்திற்கு அபிஷேக்கைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும் அவரிடம் உள்ள மின்னணு சாதனங்களையும் கைப்பற்ற உத்தரவிட்டுள்ளது.
காதல் என்ற பெயரில் தன்னைப் பாலியல் வன்கொடுமை செய்து, மேலும் இருவரும் தனியாக இருக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வைத்து தன்னை மிரட்டியதாகவும் கொல்கத்தாவைச் சேர்ந்த வைத்தியக் கல்லூரி மாணவி ஒருவர், மக்ரா பொலிஸ் நிலையத்தில் அபிஷேக் போரல் மீது புகார் அளித்துள்ளார்.
இதனடிப்படையில் அபிஷேக் உட்பட இருவர்மீது பல்வேறு பிரிவுகளின்கீழ் பொலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு இன்று (20) விசாரணைக்கு வந்தநிலையில், மாணவி தரப்பு வழக்கறிஞர், அந்த இரு நபர்களும் தங்களது கட்சிக்காரரை மட்டுமல்லாமல், வேறு பல பெண்களையும் ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி, அவர்களின் அந்தரங்கப் புகைப்படங்களை வைத்து அவர்களையும் மிரட்டியதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து கைது உத்தரவைப் பிறப்பித்த நீதிமன்றம், கைது நடவடிக்கையைத் தொடர்ந்து எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகள் தொடர்பாகவும் 11 ஆம் திகதி விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.





