முன்னாள் பொலிஸ் மா அதிபர் (IGP) சி.டி. விக்ரமரத்னவின் இறுதிச்சடங்கு இன்று (20) பொரளை பொது மயானத்தில் முழுமையான பொலிஸ் மரியாதையுடன் நடைபெற்றது.
63 வயதான சி.டி. விக்ரமரத்ன, கடந்த ஜூலை 17 ஆம் திகதி தனது இல்லத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார். அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
எனினும், பிரேதப் பரிசோதனையின் பின்னர், மரணம் தொடர்பாக திறந்த தீர்ப்பு (Open Verdict) வழங்கப்பட்டுள்ளது.
சி.டி. விக்ரமரத்ன இலங்கையின் 35ஆவது பொலிஸ் மா அதிபராக பணியாற்றியவர். 1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் அப்போதைய IGP பூஜித் ஜயசுந்தர இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
பின்னர், 2020 நவம்பர் 27 ஆம் திகதி அதிகாரப்பூர்வமாக பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
2023 மார்ச் 25 ஆம் திகதி ஓய்வு பெற வேண்டியிருந்த போதிலும், அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பதவிக்காலத்தை பலமுறை நீட்டித்தார். புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2023 நவம்பர் 23 ஆம் திகதி அவர் ஓய்வு பெற்றார்.





