இலங்கை மத்திய வங்கியின் நிதி நுண்ணறிவு பிரிவு (FIU), 2006 ஆம் ஆண்டின் இலக்கம் 6 நிதி பரிவர்த்தனை அறிக்கையிடல் சட்டத்தின் (FTRA) விதிமுறைகளை பின்பற்றத் தவறிய 11 அறிக்கையிடும் நிறுவனங்களுக்கு மொத்தமாக ரூ.14.6 மில்லியன் அபராதம் விதித்துள்ளது.
2025 ஒக்டோபர் முதல் 2026 மார்ச் வரை இடம்பெற்ற சட்ட மீறல்களை அடிப்படையாகக் கொண்டு, பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத நிதியுதவி தடுப்பு (AML/CFT) சட்டங்களின் கீழ் இந்த நிர்வாக அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு நிறுவனத்திலும் கண்டறியப்பட்ட சட்ட மீறல்களின் தன்மை மற்றும் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராதமாக அறவிடப்பட்ட அனைத்து நிதியும் அரசின் ஒருங்கிணைந்த நிதியத்தில் (Consolidated Fund) வரவு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கை, நிதி நிறுவனங்களின் சட்ட இணக்கப்பாட்டை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நிதி அமைப்பின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்குமான தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாகும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.





