நாடு முழுவதிலும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்கள் மற்றும் தூரசேவை பேருந்து முனையங்களைச் சூழவுள்ள பல கடைகளில் நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
நேற்று (20) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, அதிகாரசபையின் அதிகாரிகளால் 112 கடைகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்களும் பயணிகளும் அதிகளவில் கூடும் போக்குவரத்து மையங்களைச் சூழ இடம்பெறும் நியாயமற்ற வர்த்தக முறைகேடுகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதே இந்த விசேட நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
இச்சோதனைகளின் போது, உற்பத்தியாளரால் குறிப்பிடப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு பானங்கள், சிற்றுண்டிகள் மற்றும் பொதி செய்யப்பட்ட உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், பேக்கரி உற்பத்திப் பொருட்கள், ஏனைய உணவுப் பொருட்கள் மற்றும் பண்டங்களின் விலைகளை நுகர்வோருக்கு தெளிவாகத் தெரியக்கூடியவாறு காட்சிப்படுத்தாமை, பொதி செய்யப்பட்ட பொருட்களில் உற்பத்தி திகதி, காலாவதியாகும் திகதி, தொகுதி எண் (Batch number), உற்பத்தியாளரின் பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட அத்தியாவசியத் தகவல்களைக் குறிப்பிடாமை மற்றும் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்தமை உள்ளிட்ட பல குற்றங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இக்கடைகள் மற்றும் உணவகங்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, உரிய Magistrate நீதிமன்றங்களில் வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பயணிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் மற்றும் தரமற்ற உணவுகளை வழங்கும் வர்த்தகர்களுக்கு எதிராக தராதரம்பாராது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தவுள்ளதாக அதிகாரசபை சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இவ்வாறான சோதனைகள் எதிர்காலத்திலும் நாடு முழுவதும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
இவ்வாறான நியாயமற்ற வர்த்தக முறைகேடுகள் தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் குறுஞ்செய்தி மற்றும் முறைப்பாட்டுப் பிரிவின் 1977 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அலுவலக நேரங்களில் தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.





