மீன்பிடித் தொழிலாளர்களின் வேலைநிலைகள், பாதுகாப்பு மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) Convention 188 ஒப்பந்தத்தை அங்கீகரிக்கும் கூட்டு யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
2007 ஆம் ஆண்டு நடைபெற்ற 96வது சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், மீன்பிடித் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழல், மருத்துவ வசதிகள், சுகாதார சேவைகள் மற்றும் நலன்புரி தரநிலைகளை உறுதிப்படுத்துகிறது.
இலங்கையில் 315,000-க்கும் அதிகமானோர் மீன்பிடித் துறையில் பணியாற்றி வருகின்ற நிலையில், பாரம்பரிய முறைகளால் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சேவை வசதிகளில் பல சவால்கள் நிலவுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிப்பதன் மூலம், சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப புதிய ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த யோசனையை கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் மற்றும் தொழில் அமைச்சர் ஆகியோர் இணைந்து அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தனர்.





