இலங்கையின் பிரபலமான கலாசார விழாவான கண்டி எசல பெரஹராவின் வரலாற்று, கலாசார மற்றும் பாரம்பரிய அறிவுசார் சொத்துக்களை பாதுகாப்பதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் (WIPO) “Promoting Festival Tourism Development through Intellectual Property” திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
பல நூற்றாண்டுகள் பழமையான கலை வடிவங்கள் மற்றும் பாரம்பரிய அறிவை கொண்டுள்ள கண்டி எசல பெரஹராவை சர்வதேச ரீதியில் பாதுகாப்பதுடன், சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கும் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
இதன் கீழ் பெரஹராவின் தனித்துவமான அடையாளத்தை பாதுகாக்க பதிப்புரிமை (Copyright), வர்த்தக முத்திரை (Trademark) மற்றும் பிராண்டிங் பாதுகாப்பு போன்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவுள்ளது.
வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதுடன், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரின் இணைத் தலைமையில் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்படவுள்ளது.
இந்த செயற்பாடுகளை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய குழுவொன்றும் நியமிக்கப்படவுள்ளது.





