கடும் வெப்பத்தால் அதிரடி முடிவு: ஆண்கள் ஷார்ட்ஸ் அணிந்து அலுவலகம் வர அனுமதி – பெண்களிடம் எதிர்ப்பு!

ஜப்பானில் நிலவும் கடும் கோடை வெப்பத்தை சமாளிக்கும் நோக்கில், டோக்கியோ பெருநகர அரசு ஆண்கள் அலுவலகத்திற்கு ஷார்ட்ஸ் (Shorts) அணிந்து வருமாறு ஊக்குவித்துள்ளது. இந்த நடவடிக்கை, ஆளுநர் யுரிகோ கொய்கே முன்னெடுத்துள்ள “Tokyo Cool Biz” திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த திட்டத்தின் கீழ், வழக்கமான கோட், டை போன்ற உத்தியோகபூர்வ உடைகளுக்கு பதிலாக டி-ஷர்ட், ஸ்னீக்கர்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் போன்ற இலகுவான ஆடைகளை அணிய அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். இதன் நோக்கம், கடும் வெப்பத்தால் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகளைக் குறைப்பதுடன், மின்சாரப் பயன்பாட்டையும் குறைப்பதாகும்.

ஆனால் இந்த முடிவுக்கு சமூக வலைத்தளங்களிலும், பணியிடங்களிலும் கலவையான எதிர்வினைகள் எழுந்துள்ளன. சிலர் இந்த மாற்றம் பணியாளர்களுக்கு வசதியாக இருப்பதாக வரவேற்றுள்ள நிலையில், பல பெண்கள் இது பாலின சமத்துவமற்ற நடைமுறை என விமர்சித்துள்ளனர்.

குறிப்பாக, பெண்கள் கால்கள் தெரியும் ஆடை அணியும்போது இன்னும் ஸ்டாக்கிங்ஸ் (Tights) அணிய வேண்டும் என்ற சமூக எதிர்பார்ப்பு நீடிக்கும் நிலையில், ஆண்களுக்கு மட்டும் ஷார்ட்ஸ் அணியும் சுதந்திரம் வழங்கப்படுவது நியாயமற்றது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், சில பெண்கள் ஆண்களின் கால்முடியைப் பார்ப்பது அசௌகரியத்தை ஏற்படுத்துவதாகக் கூறி, “Leg Hair Harassment (Sunehara)” என்ற புதிய சொல்லையும் சமூக ஊடகங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.

இதன் காரணமாக, சில ஆண்கள் கால்முடியை அகற்ற லேசர் சிகிச்சைகளை நாடத் தொடங்கியுள்ளதாக அழகுசிகிச்சை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்திய கருத்துக்கணிப்பில், 53.5% பேர் அலுவலகங்களில் ஷார்ட்ஸ் அணிவதை எதிர்த்துள்ளதுடன், உடல் தோற்றம் மற்றும் கால்முடி தொடர்பான கவலைகளே முக்கிய காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

ஜப்பானில் சமீபத்தில் வெப்பநிலை 40°C-ஐத் தாண்டி பதிவாகியுள்ள நிலையில், வெப்ப அலை காரணமாக பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மக்களின் உடல்நலத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த புதிய உடை நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore