ஈரானின் தெற்கு மினாப் (Minab) நகரில் அமைந்திருந்த Shajareh Tayyebeh ஆரம்பப் பள்ளி மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 120 மாணவர்கள் உட்பட மொத்தம் 156 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து BBC வெளியிட்ட நேரடி விசாரணை பல அதிர்ச்சி தகவல்களை வெளிப்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடந்தபோது பள்ளியில் இருந்த ஆசிரியர் Amaineh Nademi, தனது மாணவர்களை காப்பாற்ற முயன்ற தருணங்களை நினைவுகூர்ந்துள்ளார். தாக்குதலுக்குப் பின்னர் பள்ளி முழுவதும் இடிந்து விழுந்ததாகவும், புகை மற்றும் இடிபாடுகளுக்குள் மாணவர்கள் சிக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மினாப் அரசுத் தரப்பு தகவலின்படி, உயிரிழந்தவர்களில் 120 குழந்தைகள், ஆசிரியர்கள் மற்றும் ஒரு கர்ப்பிணிப் பெண்ணும் அடங்குகின்றனர்.

BBC ஆய்வின்படி, பள்ளிக்கு அடுத்ததாக இருந்த Islamic Revolutionary Guard Corps (IRGC) வளாகமே குறிவைக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. இருப்பினும், பள்ளியும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்க இராணுவம் இதுவரை தாக்குதலுக்கான பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்கவில்லை. எனினும், அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்களின் படி, பழைய உளவுத்துறை தரவுகள் காரணமாக பள்ளி தவறாக இராணுவ இலக்காக அடையாளம் காணப்பட்டிருக்கலாம் என விசாரணைகள் சுட்டிக்காட்டுகின்றன.

மீட்புப் பணியாளர்கள் பல குழந்தைகளின் உடல்களை முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு சேதமடைந்திருந்ததாக தெரிவித்துள்ளனர். சிலர் அணிந்திருந்த காலுறைகள் மற்றும் ஆடைகளின் மூலம் மட்டுமே அடையாளம் காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் அமெரிக்கா–இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதலில் பொதுமக்கள், குறிப்பாக குழந்தைகள் சந்தித்த மிகப்பெரிய உயிரிழப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
(BBC)





