கொழும்பு | ஜூலை 23
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி தபால் நிலையமும், பொலன்னறுவை மாவட்டத்தின் ஜயந்திபுர தபால் நிலையமும் எதிர்வரும் ஜூலை 25ஆம் திகதி பொதுமக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளதாக வெகுஜன ஊடக அமைச்சு அறிவித்துள்ளது.
சுமார் ரூ. 60 மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த இரண்டு புதிய தபால் நிலையங்களும், அரசின் “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற கொள்கைத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளன.
2025ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் மூலம் புதிய தபால் நிலையங்களின் நிர்மாணத்திற்காக ரூ. 600 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு கட்டிடத்திற்கும் ரூ. 29.5 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. இதன் கீழ் ஏற்கனவே 5 புதிய தபால் நிலையங்களும், 3 உப தபால் நிலையங்களும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன.
ஜயந்திபுர தரம் II தபால் நிலையம் 13,300 குடும்பங்கள், 5,252 வீடுகள், அரச நிறுவனங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு சேவையளிக்கவுள்ளது.
அதேவேளை, களுவாஞ்சிக்குடி தரம் I தபால் நிலையம், கடந்த 35 ஆண்டுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட முதல் தரம் I தபால் நிலையமாகும். இது நேரடியாக 9,671 குடும்பங்களுக்கும், அதனுடன் இணைந்துள்ள 7 உப தபால் நிலையங்கள் ஊடாக மேலும் 3,821 குடும்பங்களுக்கும் சேவையளிக்கவுள்ளது.
இதற்கிடையில், தபால் சேவையை நவீனமயமாக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 200 தபால் நிலையங்கள் மற்றும் நிர்வாக அலுவலகங்களைப் புதுப்பிப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள், கணினிகள், CCTV கண்காணிப்பு அமைப்புகள், டேப்லெட்டுகள், கைரேகை பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டு வருவதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கைகள் மூலம், இலங்கையின் தபால் சேவையை நவீன, திறன் மிக்க மற்றும் மக்களுக்கு உகந்த அரச சேவையாக மாற்றுவதே அரசின் நோக்கமாகும்.





