கொழும்பு | ஜூலை 23
இலங்கை – இந்திய வர்த்தக சங்கம் (LIBA) ஏற்பாடு செய்யும் “India Calling” என்ற முதல் சர்வதேச வர்த்தக மாநாடு எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் திகதி கொழும்பு Taj Samudra ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான பொருளாதார, வர்த்தக மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த மாநாட்டில், இராஜதந்திரிகள், அரசியல் தலைவர்கள், வர்த்தகத் தலைவர்கள் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கலந்துகொண்டு கருத்துகளைப் பகிரவுள்ளனர்.
இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம், இலங்கைக்கான வர்த்தக வாய்ப்புகள், இந்தியா–இலங்கை மூலோபாய கூட்டாண்மை, முதலீட்டு வாய்ப்புகள், சுற்றுலா, புதுப்பிக்கத்தக்க ஆற்றல், டிஜிட்டல் கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகள் மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளன.
மலிபன் நிறுவனம் இந்திய சந்தையில் வெற்றி பெற்ற அனுபவம், இலங்கை – இந்திய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) பின்னணி, இந்திய சந்தைக்குள் இலங்கையின் நுழைவு வாய்ப்புகள் உள்ளிட்ட விடயங்களும் கலந்துரையாடல்களில் இடம்பெறவுள்ளன.
இலங்கை, இந்தியாவுடன் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் முதலீடுகள், வேலைவாய்ப்புகள், சுற்றுலா வருமானம் மற்றும் ஏற்றுமதி வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்க முடியும் என மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த மாநாட்டிற்கான நுழைவுச் சீட்டுகள் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், விருப்பமுள்ளவர்கள் முன்பதிவு செய்து பங்கேற்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





