கொழும்பு | ஜூலை 23
டெங்கு மற்றும் இரத்தப் பரிசோதனைகளுக்கான அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள அதிகபட்ச கட்டணங்கள் தொடர்பாக நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) மீண்டும் விளக்கமளித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்று Full Blood Count (FBC) பரிசோதனைக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக அறவிட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
CAA-வின் அறிவிப்பின்படி, தற்போது நடைமுறையில் உள்ள அதிகபட்ச கட்டணங்கள் பின்வருமாறு:
Full Blood Count (FBC) – ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு ரூ. 400
டெங்கு NS1 Antigen பரிசோதனை – ஒரு பரிசோதனை மற்றும் அறிக்கைக்கு ரூ. 1,200
இந்த கட்டண வரம்புகள் 2020 ஜூலை 29 முதல் வர்த்தமானி அறிவிப்பு இலக்கம் 2186/17 இன் கீழ் நடைமுறையில் இருப்பதாக CAA தெரிவித்துள்ளது.
தனியார் வைத்தியசாலைகள் அல்லது ஆய்வகங்களில் பரிசோதனைகளை மேற்கொள்ளும் போது நோயாளிகள் கட்டாயம் உத்தியோகபூர்வ ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக அறவிடப்பட்டால், 1977 என்ற CAA உதவி இலக்கத்திற்கு ரசீது மற்றும் ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதாரத் துறையில் அநியாயமான கட்டண அறவீடுகளைத் தடுக்கும் வகையில் இந்த விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்றும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.





