யாழ்ப்பாணம் | ஜூலை 23
அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக Full Blood Count (FBC) இரத்தப் பரிசோதனைக்காக கட்டணம் அறவிட்ட யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு ரூ. 30 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை (CAA) வெளியிட்டுள்ள தகவலின்படி, பலாலி வீதி, கந்தர்மடத்தில் அமைந்துள்ள Venus Speciality Hospital (Pvt) Ltd நிறுவனம், FBC பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச கட்டணமான ரூ. 400க்கு பதிலாக ரூ. 550 அறவிட்டிருந்தது.
கடந்த ஜூலை 13 அன்று CAA அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது இந்த விதிமீறல் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
ஜூலை 21 அன்று வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த வைத்தியசாலை குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் ரூ. 30 இலட்சம் அபராதம் விதித்ததுடன், இந்த விதிமீறல் தொடர்பான அறிவிப்பை தேசிய நாளிதழ்களில் தனது சொந்த செலவில் வெளியிடவும் உத்தரவிட்டது.
தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும் பொதுமக்கள், அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை சரிபார்த்து, கட்டாயம் உத்தியோகபூர்வ ரசீதைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதிக கட்டணம் அறவிடப்பட்டால் 1977 என்ற CAA உதவி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்யுமாறும் நுகர்வோர் அலுவல்கள் அதிகாரசபை அறிவுறுத்தியுள்ளது.





