2022ஆம் ஆண்டு “GoHomeGota 2022” போராட்ட இயக்கத்தில் ஈடுபட்ட சமூக செயற்பாட்டாளர் முத்துஹீன் கெதர திசர நுவந்த அனுருத்த பண்டார கைது செய்யப்பட்டமை அவரது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மூன்று நீதியரசர்கள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பில், பொலிஸார் போதுமான மற்றும் நியாயமான காரணங்கள் இன்றி கைது நடவடிக்கையை மேற்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அவரது கைது அரசாங்கத்தை விமர்சித்ததற்கும் அரசியல் கருத்து வெளிப்பாட்டிற்கும் எதிரான நடவடிக்கையாக அமைந்துள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், கைது செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தகவல் அறிக்கையில் குறித்த நபரை அடையாளப்படுத்தும் உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றும், அவரது சமூக ஊடக பதிவுகள் குற்றச்செயலாக கருத முடியாது என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, அரசியலமைப்பின் 12(1) மற்றும் 13(1) உறுப்புரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.





