இலங்கையிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கூடுதல் அமெரிக்க வரி 10% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த முடிவு இலங்கை அரசாங்கம் மற்றும் பேச்சுவார்த்தைக் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியால் கிடைத்த சாதகமான விளைவு என அவர் குறிப்பிட்டார்.
இதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் தலையீடு மற்றும் வழிகாட்டுதல்களையும், நிதிச் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும தலைமையிலான குழுவின் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
இந்தக் குழுவில்:
மத்திய வங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க
வர்த்தக செயலாளர் விமலேந்திரராஜா
பிரதம பொருளாதார ஆலோசகர் மற்றும் முதலீட்டு சபை தலைவர் துமிந்த ஹுலங்கமுவ
வாஷிங்டனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள்
ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தினசரி பேச்சுவார்த்தைகள், தகவல் சேகரிப்பு, ஆலோசனைகள் மற்றும் அமெரிக்க அதிகாரிகளுடன் நல்லுறவை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மூலம் இந்த முடிவு எட்டப்பட்டதாக மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
மேலும், இந்த வெற்றியில் திருப்தி அடைந்து நிற்காமல் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் எச்சரித்தார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) புதிய வரி நடவடிக்கைகள் தொடர்பான அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.





