கடுவலை பிரதான பஸ் நிலையத்தில் இடம்பெற்ற சொகுசு பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பான CCTV காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக கடுவலை – மாத்தறை வழித்தடத்தில் சேவையில் ஈடுபட்டிருந்த சொகுசு பஸ் ஒன்றை இரு முகமூடி அணிந்த நபர்கள் தீ வைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற CCTV காட்சிகளில்,
🔹 இரு நபர்கள் பஸ்ஸை நோக்கி செல்வது
🔹 பஸ்ஸுக்கு தீ வைப்பது
🔹 பின்னர் எவ்வித பதற்றமுமின்றி அங்கிருந்து வெளியேறுவது
பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் புதன்கிழமை அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணிக்குள் கடுவலை வாராந்த சந்தை மைதானத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
தீ விபத்தில் குறித்த சொகுசு பஸ் முழுமையாக சேதமடைந்ததுடன், அருகில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு கடுவலை – கொள்ளுப்பிட்டி சேவை பஸ்களும் சிறியளவில் சேதமடைந்துள்ளன.
சம்பவத்தின் போது பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் உள்ளே உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அருகிலிருந்த மற்றொரு பஸ் சாரதி மற்றும் நடத்துனர் சந்தேகநபர்களை அவதானித்து எச்சரிக்கை விடுத்ததையடுத்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர்.
இந்த தாக்குதல் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





