இலங்கையின் முதலாவது Zero Emission (பூஜ்ஜிய உமிழ்வு) சுற்றுச்சூழல் சுற்றுலா (Eco-Tourism) தலமாக டெல்ஃப்ட் தீவை மாற்றுவதற்கான திட்டங்களை அரசாங்கம் அறிவித்துள்ளது.
நிலைத்தன்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தீவின் தனித்துவமான இயற்கை மற்றும் கலாசார பாரம்பரியத்தை பாதுகாப்பதை மையமாகக் கொண்டு இந்த அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுற்றுலா பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க தலைமையில் டெல்ஃப்ட் தீவின் அபிவிருத்தி தொடர்பான விசேட கள ஆய்வு மற்றும் பங்குதாரர் கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது.
டச்சு கால கட்டிட இடிபாடுகள், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மற்றும் புகழ்பெற்ற காட்டு குதிரைகள் போன்ற சிறப்பம்சங்களைக் கொண்ட டெல்ஃப்ட் தீவு, மிகப்பெரிய சுற்றுலா வாய்ப்புகளை கொண்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்தீவு தற்போது சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமன்றி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும் அனுபவிக்கக்கூடிய முக்கிய இடமாக மாற்றப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
தீவின் முழுமையான சுற்றுலா திறனை வெளிக்கொணர்வதற்காக நிலையான மற்றும் சுற்றுச்சூழலுக்கு பொறுப்பான அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
குடிநீர் வசதி, வீதி கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் அணுகல் வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய உட்கட்டமைப்பு தேவைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், உள்ளூர் மக்களின் பங்களிப்பை அதிகரித்து, சுற்றுலா துறையின் மூலம் அவர்கள் நேரடியாக பயனடையும் வகையில் விருந்தோம்பல் மற்றும் அறிவுத் திறன்களை மேம்படுத்தும் திட்டங்களும் முன்னெடுக்கப்படவுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு, புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் நிலையான தீர்வுகளை ஊக்குவிக்கும் ஒரு முன்னுதாரண சுற்றுச்சூழல் சுற்றுலா தலமாக டெல்ஃப்ட் தீவை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், அரச அதிகாரிகள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





