சம்மாந்துறை நகரப் பகுதியில் பொதுப் போக்குவரத்துக்கு இடையூறாகவும், வீதி விபத்துகளுக்கு காரணமாகவும் காணப்பட்ட கட்டாக்காலி மாடுகளை, சம்மாந்துறை பிரதேச சபை மற்றும் சம்மாந்துறை பொலிஸார் இணைந்து இன்று விசேட நடவடிக்கையின் மூலம் பிடித்துள்ளனர்.
சம்மாந்துறை பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உரிமையாளர்களால் கட்டுப்பாடின்றி விடப்பட்ட மாடுகள் காரணமாக அன்றாடம் வீதி விபத்துகள் இடம்பெறுவதுடன், விவசாயிகளின் பெறுமதியான பயிர்களும் சேதமடைந்து வருவதாக தொடர்ச்சியாக பல முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, பிரதேச சபைகள் சட்டத்தின் கீழ் சம்மாந்துறை நகரப் பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாகச் சுற்றித்திரிந்த கட்டாக்காலி மாடுகள் பிடிக்கப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் அதனை பொருட்படுத்தாத காரணத்தால், மாடுகளை மீட்டுச் செல்லும் உரிமையாளர்கள் தண்டப்பணம் செலுத்தி தங்களது மாடுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என பிரதேச சபை அறிவித்துள்ளது.
மேலும், ஒரு நாளுக்குள் மாடுகளை பெற்றுக்கொள்ளத் தவறினால், பராமரிப்புச் செலவும் மேலதிகமாக அறவிடப்படும் என்றும், மூன்று நாட்களுக்குள் உரிமையாளர்கள் மாடுகளை பெற்றுக்கொள்ளாவிட்டால், அவை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சம்மாந்துறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.





