டெமட்டகொட – குப்பியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு முயற்சி சம்பவம் தொடர்பில் இரு சந்தேகநபர்களை பொரளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பொரளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவர் பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர் நேற்றைய தினம் (05) லேக் டிரைவ் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 10.900 கிராம் ICE போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 23ஆம் திகதி டெமட்டகொட – குப்பியாவத்தை பகுதியில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ய முயற்சித்த சம்பவத்தில், குறித்த சந்தேகநபர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் பொரளை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய மற்றுமொரு நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவரிடமும் மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





