இலங்கையில் 2026ஆம் ஆண்டு இதுவரை 88,088 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகளின் உத்தியோகபூர்வ தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு தொற்றுகள் அதிகரித்துள்ளதாகவும், ஜனவரி மாதத்தில் 7,866 ஆக காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை ஜூலை மாதத்தில் 29,975 ஆக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திலேயே 2,739 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
மேல் மாகாணம் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதுடன், மொத்த நோயாளர்களில் 52.9% (46,651 பேர்) இம்மாகாணத்தில் பதிவாகியுள்ளனர்.
மாவட்ட ரீதியாக,
கம்பஹா – 18,739 பேர்
கொழும்பு – 17,490 பேர்
கண்டி – 6,195 பேர்
மாத்தறை – 5,910 பேர்
களுத்துறை – 5,753 பேர்
என அதிகளவு டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை 63 டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், நோய் தாக்கத்தினால் ஏற்படும் மரண வீதம் 0.07% ஆக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 137 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாயம் அதிகமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
தற்போதைய தென்மேற்கு பருவமழை காரணமாக டெங்கு பரவும் சூழல் அதிகரிக்கக்கூடும் என்பதால், நுளம்பு பெருகும் இடங்களை அகற்றுமாறும், டெங்கு அறிகுறிகள் காணப்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுமாறும் சுகாதார அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.





