நேட்டோ உச்சி மாநாட்டுக்குப் பின்னர் துருக்கியிலிருந்து அமெரிக்கா திரும்பியபோது, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ரகசியமாக விமானம் மாற்றப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஜூலை 8ஆம் திகதி துருக்கியின் அங்காராவிலிருந்து புறப்படுவதற்கு முன்னர், கமெராக்கள் முன்னிலையில் Air Force One விமானத்தில் ஏறிய ட்ரம்ப், பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக அடையாளமிடப்படாத மற்றொரு C-32 விமானத்திற்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவை அமெரிக்க Secret Service மற்றும் இராணுவத்தினர் எடுத்ததாக ட்ரம்ப் கூறியுள்ளார்.
“அங்கு ஏதோ ஒரு அச்சுறுத்தல் இருந்ததாக நான் நினைக்கிறேன்” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
NBC News மற்றும் The Washington Post வெளியிட்ட தகவல்களின்படி, ட்ரம்ப் Air Force One இலிருந்து உணவு விநியோக வாகனம் மூலம் மறைவாக வெளியேற்றப்பட்டு, அடையாளமிடப்படாத விமானத்தில் பிரிட்டனில் உள்ள இராணுவத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துருக்கியிலிருந்து Air Force One புறப்படும் போது, தோளில் சுமந்து ஏவக்கூடிய ஏவுகணை மூலம் ட்ரம்பை கொலை செய்யும் முயற்சி தொடர்பான ஈரானிய சதித்திட்டம் குறித்த புதிய அச்சுறுத்தல் காரணமாகவே விமான மாற்றம் இடம்பெற்றிருக்கலாம் என அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக NBC News செய்தி வெளியிட்டுள்ளது.
அப்போது ட்ரம்புடன் பயணிக்க வேண்டிய ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் மூத்த வெள்ளை மாளிகை அதிகாரிகள் சிலர், அதில் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் நிதியமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகியோரும், மாற்று விமானத்தில் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அச்சுறுத்தல் தொடர்பான முழுமையான விபரங்களை அமெரிக்க அதிகாரிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள காங்கிரஸ் ஜனநாயகக் கட்சியினர் விளக்கமொன்றை கோரியுள்ளனர்.
ட்ரம்ப், தனக்கு எதிரான அச்சுறுத்தல் குறித்து அதிகம் விசாரிக்கவில்லை என்றும், ஜனாதிபதியாக இருப்பதால் இத்தகைய அச்சுறுத்தல்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை என்றும் தெரிவித்துள்ளார்.





