இலங்கையில் இந்த வருடம் இதுவரை 90,695 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், நாட்டின் பல மாவட்டங்கள் மற்றும் மாகாணங்களில் டெங்கு பரவல் தொடர்ந்து அதிகமாக காணப்படுவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் தரவுகளின்படி, ஆகஸ்ட் 11ஆம் திகதி நள்ளிரவு வரை ஆகஸ்ட் மாதத்தில் 5,348 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். முன்னதாக ஜூலை மாதத்தில் 29,973 பேரும், ஜூன் மாதத்தில் 21,533 பேரும் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு
மொத்த டெங்கு நோயாளர்களில் 52.9% பேர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.
மாவட்ட ரீதியில்,
- கம்பஹா – 19,291
- கொழும்பு – 16,909
- கண்டி – 6,466
- மாத்தறை – 5,990
- களுத்துறை – 5,416
என்ற அளவில் அதிகமான நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்களில் மட்டும் பதிவான நோயாளர்களின் எண்ணிக்கை நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சுமார் 40% ஆகும்.
மாகாண ரீதியில் தென் மாகாணத்தில் 12,206 பேரும், மத்திய மாகாணத்தில் 7,475 பேரும், சபரகமுவ மாகாணத்தில் 5,114 பேரும், வடமேல் மாகாணத்தில் 4,050 பேரும், ஊவா மாகாணத்தில் 4,137 பேரும் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் 1,287 பேரும், கிழக்கு மாகாணத்தில் 2,799 பேரும் பதிவாகியுள்ளனர்.
65 பேர் உயிரிழப்பு
இந்த வருடம் இதுவரை டெங்கு காரணமாக 65 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது 0.07% மரண வீதமாக பதிவாகியுள்ளது.
மேலும், 31ஆவது வாரத்தில் 119 மருத்துவ அதிகாரி சுகாதாரப் பிரிவுகள் (MOH areas) அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், நாளொன்றுக்கு சராசரியாக 1,509 புதிய டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புற மற்றும் நகரை அண்மித்த பகுதிகளில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அதிகமாக காணப்படுவதால், சமூக மட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.





