ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சீனாவின் China Communications Construction Company Limited (CCCC) நிறுவனத்தின் சிரேஷ்ட பிரதிநிதிகள் இடையிலான சந்திப்பு நேற்று (11) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
Zhang Bingnan தலைமையிலான சீன பிரதிநிதிகள் குழுவினர் ஜனாதிபதியை சந்தித்து, தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் குறிப்பாக கொழும்பு துறைமுக நகரத்தை மையமாகக் கொண்ட எதிர்கால முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால நோக்குடன் கூடிய திட்டங்கள் மற்றும் கொள்கைகள் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக சீன பிரதிநிதிகள் இதன்போது தெரிவித்தனர்.
அரசாங்கத்தின் தற்போதைய வேலைத்திட்டங்கள் தொடர்பில் நம்பிக்கை வெளியிட்ட அவர்கள், இதன் காரணமாக இலங்கையில் மேலும் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்வது குறித்து CCCC நிறுவனம் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வர்த்தகம் மற்றும் தளவாட சேவைகள் (Logistics), டிஜிட்டல் சேவைகள் உள்ளிட்ட துறைகளிலும் தமது முதலீடுகளை விரிவுபடுத்துவதில் ஆர்வம் உள்ளதாக சீன பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
இத்துறைகளில் இலங்கையை பிராந்திய மையமாக (Regional Hub) நிலைநிறுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதேவேளை, இலங்கையில் முன்னெடுக்கப்படும் தமது திட்டங்களுக்கான 90% பணியாளர்களை உள்ளூரிலிருந்தே இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சீன பிரதிநிதிகள் உறுதியளித்தனர். இதன் மூலம் இலங்கையர்களுக்கு கணிசமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் பிரதான பணியாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவின் தலைவர் ஹர்ஷ அமரசேகர PC உள்ளிட்ட அதிகாரிகளும், CCCC மற்றும் அதன் துணை நிறுவனமான CHEC-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.





