பிரான்ஸில் நுகர்வோரின் முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்படும் வணிக தொலைபேசி அழைப்புகளுக்கு நாடளாவிய தடை அமுலுக்கு வந்துள்ளது.
புதிய விதிமுறைகள் 2026 ஆகஸ்ட் 11 முதல் நடைமுறைக்கு வந்துள்ளதுடன், விற்பனை நோக்கில் தொலைபேசி மூலம் நுகர்வோரைத் தொடர்புகொள்ளும் நிறுவனங்கள், அந்த நபர் வணிக அழைப்புகளைப் பெறுவதற்கு முன்கூட்டியே சம்மதம் தெரிவித்திருப்பதை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், தேவையற்ற சந்தைப்படுத்தல் அழைப்புகளைத் தவிர்ப்பதற்கு நுகர்வோர் தாங்களாகவே விலகல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய நிலை காணப்பட்டது.
எனினும், ஏற்கனவே நிலவும் வணிக ஒப்பந்தத்துடன் தொடர்புடைய சில அழைப்புகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ளன.
தேவையற்ற தொலைபேசி அழைப்புகள் மற்றும் தொலைபேசி மோசடிகளை கட்டுப்படுத்தி, நுகர்வோர் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளை மீறும் தனிநபர்களுக்கு அதிகபட்சமாக 75,000 யூரோக்களும், நிறுவனங்களுக்கு 375,000 யூரோக்களும் அபராதமாக விதிக்கப்படலாம்.
இதன் மூலம், தேவையற்ற வணிக அழைப்புகளை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான முன் அனுமதி நடைமுறைகளை அமுல்படுத்தும் நாடுகளின் வரிசையில் பிரான்ஸும் இணைந்துள்ளது.





