கொழும்பு | ஆகஸ்ட் 12
இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான உயர்மட்ட முதலீட்டு கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
கடந்த ஜூலை 31ஆம் திகதி நடைபெற்ற இக்கலந்துரையாடலில், இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவர், பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளும், இலங்கை அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
2014ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுவரும் இலங்கை–ஐரோப்பிய ஒன்றிய முதலீட்டாளர் கலந்துரையாடல் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற இம்முறை சந்திப்பு, இந்த ஆண்டு அமைச்சரவை மட்டத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக்கலந்துரையாடலில் முதலீட்டு சூழல் சீர்திருத்தங்கள், டிஜிட்டல் Single Window Investment Approval System அறிமுகம், முன்மொழியப்பட்ட Investment Protection Bill, சுங்கத்துறை மற்றும் தொழில் வலயங்களை நவீனமயமாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
அத்துடன், 2026ஆம் ஆண்டின் இறுதியில் காலாவதியாகவுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ வரிச் சலுகையின் கீழான தொடர்ச்சியான சந்தை அணுகலின் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் Global Gateway திட்டத்தின் கீழ் இலங்கையுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளக்கூடிய ஒத்துழைப்புகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்தும் இருதரப்பினரும் ஆராய்ந்துள்ளனர்.
கலந்துரையாடலின் இறுதியில், குறுகிய காலத்தில் முன்னெடுக்க வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டதுடன், இலங்கை–ஐரோப்பிய ஒன்றிய பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான அர்ப்பணிப்பும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.





