கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) வேகமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் தொற்று, இதுவரை பதிவான எபோலா பரவல்களிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய நிலையை நோக்கிச் சென்று வருவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரித்துள்ளது.
WHO பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸ் தெரிவித்துள்ளதன்படி, தற்போதைய வேகத்தில் தொற்று தொடர்ந்து பரவுமானால், 2014–2016 காலப்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவலைவிட அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
கிழக்கு கொங்கோவில் ஏற்பட்டுள்ள தற்போதைய பரவலில் இதுவரை 4,300-க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால், இது இதுவரை வேகமாகப் பரவி வரும் எபோலா தொற்றாக கருதப்படுகிறது.
இந்தப் பரவல் அதிகாரப்பூர்வமாக மே 15ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. எனினும், பின்னர் மேற்கொள்ளப்பட்ட மரபணு ஆய்வுகளில் வைரஸ் உண்மையில் பெப்ரவரி மாதத்திலேயே பரவத் தொடங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
தற்போதைய தொற்று Bundibugyo எனப்படும் அரிதான எபோலா வைரஸ் வகையால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வகைக்கு எதிராக இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி அல்லது சிகிச்சை எதுவும் இல்லை.
தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு, பாதிக்கப்பட்ட பகுதிகளின் தொலைதூர அமைவிடம் மற்றும் தெற்கு சூடான், உகாண்டா மற்றும் ருவாண்டா எல்லைப் பகுதிகளில் நிலவும் மோதல்கள் பெரும் சவாலாக உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
மேலும், சுகாதாரக் குழுக்கள் சென்றடைய முடியாத பகுதிகளில் பல தொற்றுகளும் உயிரிழப்புகளும் இடம்பெற்று வருவதாகவும், பலவீனமான உட்கட்டமைப்பு, போதிய வளங்கள் இல்லாத வைத்தியசாலைகள், தவறான தகவல்கள் மற்றும் ஊதியம் வழங்கப்படாததற்கு எதிராக சுகாதாரப் பணியாளர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தங்கள் ஆகியவை நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை மேலும் பாதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
WHO-வின் சுகாதார அவசர எச்சரிக்கை மற்றும் பதில் நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் டாக்டர் அப்திரஹ்மான் மஹமூத், மிதமான கணிப்பின்படி இந்தத் தொற்று அடுத்த ஆறு மாதங்களுக்குள் உச்சத்தை அடையக்கூடும் என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, நிலைமை மோசமடையும் பட்சத்தில், தொற்றுநோய் 9 முதல் 12 மாதங்கள் வரை நீடிக்கக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
2014–2016 காலப்பகுதியில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவல், சுமார் 28,000 தொற்றுகளுடன் 11,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை ஏற்படுத்தி, இதுவரை உலகின் மிக மோசமான எபோலா பரவலாக பதிவாகியுள்ளது.
பாதிக்கப்பட்ட சமூகங்களை விரைவாக சென்றடைய முடியாவிட்டால், தற்போதைய கொங்கோ எபோலா பரவல் அந்த உயிரிழப்பு எண்ணிக்கையை மிஞ்சக்கூடும் என WHO அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
(Al Jazeera)





