இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவரகமான JICA நிறுவனத்தின் சிரேஷ்ட துணைத் தலைவர் ஷோஹெய் ஹரா தலைமையிலான குழுவினர் பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பு டெம்பிள் ட்ரீஸ் வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் அபிவிருத்தி முன்னுரிமைகள், ஜப்பான்–இலங்கை இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டனர்.
இச்சந்திப்பில் திறைசேரி மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, இலங்கைக்கான விஜயத்தின் போது JICA சிரேஷ்ட துணைத் தலைவர் ஷோஹெய் ஹரா, ஐக்கிய நாடுகள் சபையின் உதவிப் பொதுச் செயலாளரும் UN Global Compact நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியுமான சந்தா ஓஜியம்போ உள்ளிட்டோரையும் சந்தித்து, நிலையான அபிவிருத்தி மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளை (SDGs) முன்னெடுப்பதற்கான கூட்டாண்மைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
மேலும், ஷோஹெய் ஹரா இலங்கையின் பல பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்திப்பதுடன், அனுராதபுரம் நீர் வழங்கல் அபிவிருத்தித் திட்டம் மற்றும் புத்தளம் டொப்ளர் வானிலை ரேடார் வலையமைப்பு நிறுவும் திட்டம் உள்ளிட்ட JICA ஆதரவிலான முக்கிய திட்டங்களையும் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்திப்புகள் மற்றும் கள விஜயங்கள் மூலம் இலங்கையின் நிலையான வளர்ச்சி, பேரிடர் தாங்குதிறன் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொடர்ந்து ஆதரவளிப்பதில் JICA கொண்டுள்ள அர்ப்பணிப்பு உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





