அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்களுக்கான சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்துள்ள நிலையில், இதுவரை 7 இலட்சத்து 56 ஆயிரத்திற்கும் அதிகமான கணக்குகளை நீக்கியுள்ளதாக Meta நிறுவனம் தெரிவித்துள்ளது.
Facebook மற்றும் Instagram தளங்களின் தாய் நிறுவனமான Meta, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சமூக ஊடகத் தடை அமுலுக்கு வந்தது முதல் ஜூன் மாதம் வரை, 16 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியர்களுடையவை என சந்தேகிக்கப்பட்ட கணக்குகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன்படி, Instagram-இல் 4 இலட்சத்து 62 ஆயிரம் கணக்குகளும், Facebook-இல் 2 இலட்சத்து 94 ஆயிரம் கணக்குகளும் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.
இதற்கு முன்னர் ஜனவரி மாதம் வரை Instagram-இல் 3 இலட்சத்து 31 ஆயிரம் மற்றும் Facebook-இல் 1 இலட்சத்து 73 ஆயிரம் கணக்குகள் நீக்கப்பட்டதாக Meta தெரிவித்திருந்தது.
இந்நிலையில், அவுஸ்திரேலிய இணைய ஒழுங்குமுறை அதிகாரிகள், சமூக ஊடக நிறுவனங்கள் சட்டத்தை போதுமான அளவில் கடைப்பிடிக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டி, அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பில் பரிசீலித்து வருகின்றனர்.
மேலும், சமூக ஊடகத் தடையை மீறுவதற்கான அதிகபட்ச அபராதத்தை 99 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்கள் வரை இரட்டிப்பாக்கும் சட்டத்தையும் அவுஸ்திரேலிய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
Meta நிறுவனம், 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகளை அடையாளம் காண செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளது. பிறந்தநாள் கொண்டாட்டங்கள், பாடசாலை தரநிலைகள் தொடர்பான பதிவுகள் உள்ளிட்ட கணக்கின் பல்வேறு தகவல்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
இதற்கிடையில், Meta, TikTok, Google நிறுவனத்தின் YouTube மற்றும் Snapchat உள்ளிட்ட சமூக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள நாடாளுமன்ற விசாரணையில் சாட்சியமளிக்க உள்ளனர்.
“சட்ட அமுலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன; இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்” என Meta தெரிவித்துள்ளது.





