ஆப்கானிஸ்தான் அணி நேரடித் தகுதி பெற்றதைத் தொடர்ந்து, 2027 ஒருநாள் உலகக் கிண்ணத் தொடருக்கான நேரடித் தகுதி வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்துள்ளது.
அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதன் மூலம், 2027 உலகக் கிண்ணத் தொடருக்கான தரவரிசையின் இறுதி நேரடித் தகுதி இடத்தையும் உறுதி செய்துள்ளது.
2027 உலகக் கிண்ணத் தொடருக்கு, செப்டெம்பர் 30ஆம் திகதி வரையிலான ICC ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களைப் பெறும் அணிகளுடன், போட்டியை நடத்தும் தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகளும் நேரடியாகத் தகுதி பெறுகின்றன.
இதுவரை இந்தியா, அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, இங்கிலாந்து, இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் சிம்பாப்வே ஆகிய அணிகள் நேரடித் தகுதியை உறுதி செய்துள்ளன.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்தியாவுக்கு எதிராக இன்னும் இரண்டு போட்டிகள் எஞ்சியிருந்தாலும், அவற்றில் வெற்றி பெற்றாலும் ஆப்கானிஸ்தானை தரவரிசையில் முந்த முடியாது என்பதால், நேரடித் தகுதி வாய்ப்பை இழந்துள்ளது.
இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டிகளில் (ICC World Cup Qualifier) பங்கேற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தத் தகுதிச் சுற்றில் மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, CWC League 2 அணிகள் மற்றும் Qualifier Play-offs மூலம் தகுதி பெறும் அணிகள் உள்ளிட்ட மொத்தம் 10 அணிகள் போட்டியிடவுள்ளன.
தகுதிச் சுற்றில் வெற்றி பெறுவதன் மூலம் அல்லது இறுதிப் போட்டி வரை முன்னேறுவதன் மூலம் 2027 உலகக் கிண்ணத்திற்குத் தகுதி பெற முடியும். மேலும், 2ஆம் முதல் 4ஆம் இடங்களுக்குள் நிறைவுசெய்யும் அணிகளுக்கு Super Series Play-off மூலம் இறுதி வாய்ப்பைப் பெறும் சந்தர்ப்பமும் உள்ளது.
குறிப்பாக, 2023 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றிலும் தோல்வியடைந்து, வரலாற்றில் முதன்முறையாக உலகக் கிண்ணத் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை மேற்கிந்திய தீவுகள் அணி இழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





