இந்தியாவின் ஒடிசா கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில் பனாமா கொடியுடன் பயணித்த MV Ocean Winner என்ற சரக்குக் கப்பல் வங்காள விரிகுடாவில் மூழ்கியுள்ள நிலையில், அதில் பயணித்த 24 பணியாளர்களில் இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
ஒடிசாவின் பாரதீப் துறைமுகத்திலிருந்து கடந்த 20ஆம் திகதி இரவு சுமார் 10.30 மணியளவில் புறப்பட்ட இந்தக் கப்பல், சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கப்பலில் ஒடிசாவிலிருந்து ஏற்றப்பட்ட இரும்புத் தாது சரக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கப்பலில் 20 சீனர்கள், 3 மியான்மர் நாட்டவர்கள் மற்றும் ஒரு பங்களாதேஷ் நாட்டவர் என மொத்தம் 24 பணியாளர்கள் இருந்துள்ளனர்.
கடந்த 22ஆம் திகதி முற்பகல் கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டமை தொடர்பில் இந்தியாவின் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதையடுத்து இந்திய கடலோரக் காவல்படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதுடன், அருகில் பயணித்த MT Aisopos என்ற வர்த்தகக் கப்பலும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.
அந்தக் கப்பல் இரண்டு உயிர்காப்புப் படகுகளில் இருந்த இரண்டு பணியாளர்களை உயிருடன் மீட்டுள்ளதாக இந்திய கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.
மேலும், இந்திய கடலோரக் காவல்படையின் Varad, Anmol மற்றும் Vijit ஆகிய கப்பல்களும் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்பகுதியில் பயணிக்கும் ஏனைய கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீட்புப் பணிகளுக்கு உதவுமாறு கோரப்பட்டுள்ளது.
தற்போதைய தகவலின்படி, மீதமுள்ள 22 பணியாளர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. கப்பல் மூழ்கியதற்கான சரியான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





