தமிழகம்: தமிழகத்தில் H1N1 பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி, தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த நிலையில், தற்போது 339 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளின் காய்ச்சல் சிகிச்சைப் பிரிவுகளிலும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை உள்ளிட்டவை பொதுவான அறிகுறிகளாக குறிப்பிடப்படுகின்றன. சிலருக்கு தசை அல்லது மூட்டு வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம்.
அறிகுறிகள் தென்பட்டால் அவற்றை சாதாரண சளி அல்லது காய்ச்சல் எனக் கருதி அலட்சியப்படுத்தாமல், அருகிலுள்ள சுகாதார நிலையத்தை அணுகி மருத்துவ ஆலோசனை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவரின் ஆலோசனையின்றி மருந்துகளை தாமாக வாங்கி உட்கொள்வதைத் தவிர்க்குமாறும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.





