நேபாளத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தத்தில் 1,400-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளை துரிதப்படுத்தும் வகையில் நேபாள இராணுவம் மற்றும் மீட்புப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இமயமலைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாக திடீரென பெருமளவு நீர், சேறு மற்றும் பாறைகள் கீழ்நோக்கி அடித்துச் சென்றதே இந்த பேரழிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இதன் தாக்கத்தால் எல்லைப் பகுதிகளில் உள்ள பல குடியிருப்புகள், பாலங்கள் மற்றும் பிற உட்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ளன.
இதற்கிடையில், திபெத் பகுதியிலும் வெள்ளத்தின் தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு மூவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நேபாளம் மற்றும் சீனா பகுதிகளில் பதிவான மொத்த உயிரிழப்பு 472 ஆக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், திபெத்தில் ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் தற்காலிக நீர்த்தேக்கம் ஒன்று உருவாகியுள்ளதாகவும், அதில் பெருமளவு நீர் தேங்கியுள்ளதால் கீழ்நிலைப் பகுதிகளுக்கு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் காணாமல் போயுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்டவர்களை கண்டறிந்து மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்காக நேபாள இராணுவத்தின் ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.





