அரச மருந்தாளர் சங்கம் எதிர்வரும் 31ஆம் திகதி காலை 8.00 மணி முதல் ஒரு நாள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
மருந்தாளர்களுக்கான மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததை தொடர்ந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
மருந்தாளர்களின் மேலதிக நேர கொடுப்பனவு தொடர்பாக வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையில் மாற்றம் செய்யப்பட்டிருந்த போதிலும், பின்னர் குறித்த சுற்றறிக்கை ரத்து செய்யப்பட்டதாக சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் இதுவரை அதிகாரிகளிடமிருந்து திருப்திகரமான தீர்வு கிடைக்காததால், சுற்றறிக்கையை மீண்டும் நடைமுறைப்படுத்துமாறு கோரி தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மகப்பேறு மற்றும் குழந்தைகள் வைத்தியசாலைகள், புற்றுநோய் வைத்தியசாலைகள் மற்றும் மனநல வைத்தியசாலைகள் இந்த வேலைநிறுத்த நடவடிக்கையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய வைத்தியசாலைகளில் அவசர மற்றும் அத்தியாவசிய மருந்தக சேவைகளை தொடர்ந்து வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரச மருந்தாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.





