இம்ரான் கானின் மகன்கள் வழங்கிய நேர்காணல்: Sky மீது PCB முறைப்பாடு

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் போது, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணித் தலைவர் இம்ரான் கானின் மகன்களான சுலைமான் கான் மற்றும் காசிம் கான் ஆகியோரின் நேர்காணலை ஒளிபரப்பியமை தொடர்பில் Sky தொலைக்காட்சி நிறுவனத்திடம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை (PCB) முறைப்பாடு செய்துள்ளது.

முன்னாள் இங்கிலாந்து அணித் தலைவர் மைக்கேல் அதர்டன் இந்த நேர்காணலை மேற்கொண்டிருந்தார். இங்கிலாந்து – பாகிஸ்தான் டெஸ்ட் தொடரின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பாளரான Sky, லோர்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் நேர்காணலின் முழுமையான பதிவையும் ஒளிபரப்பியது.

இம்ரான் கானின் மகன்கள் வழங்கிய கருத்துகள், பாகிஸ்தானின் தற்போதைய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் அமைந்திருந்ததாக PCB தரப்பு அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக PCB தனது எதிர்ப்பை Sky நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது. முறைப்பாடு கிடைத்ததை Sky உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இதுவரை விரிவான பதில் எதனையும் வெளியிடவில்லை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபைக்கும் (ECB) இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போட்டியை புறக்கணிக்க PCB எச்சரித்ததா?

நேர்காணல் ஒளிபரப்பப்பட்டால், லோர்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் மீண்டும் மைதானத்திற்குச் செல்லாமல் இருக்கலாம் என PCB தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Sky பின்னர் நேர்காணலின் சுமார் 18 நிமிட காணொளியை வெளியிட்டது. எனினும், அந்த நேரத்தில் பாகிஸ்தான் வீரர்கள் ஏற்கனவே இரண்டாவது அமர்வுக்காக மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் உடல்நிலை குறித்து மகன்கள் கவலை

நேர்காணலின்போது சுலைமான் மற்றும் காசிம் கான் ஆகியோர் சிறையில் உள்ள தங்களது தந்தை இம்ரான் கானின் உடல்நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக, இம்ரான் கானுக்கு உரிய மருத்துவ சிகிச்சை கிடைப்பது மிகவும் அவசியம் என காசிம் கான் தெரிவித்துள்ளார். தந்தையை சந்தித்தபோது அவர் கண் தொடர்பான பிரச்சினையால் கண் கட்டுடன் காணப்பட்டதாகவும், வழக்கமாக அமைதியானவராக இருக்கும் இம்ரான் கான் மன அழுத்தத்துடனும் பதற்றத்துடனும் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்ரான் கானின் உடல்நிலை தொடர்பில் முன்னாள் சர்வதேச கிரிக்கெட் அணித் தலைவர்களும் முன்னதாக கவலை வெளியிட்டிருந்தனர். 14 முன்னாள் அணித் தலைவர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்திடம் இதுகுறித்து கவலை தெரிவித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியிருந்தனர்.

இம்ரான் கான் ஏன் சிறையில் உள்ளார்?

1992 உலகக் கிண்ணத்தை வென்ற பாகிஸ்தான் அணியின் தலைவரான இம்ரான் கான், 2022ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து விலகிய பின்னர் பல்வேறு சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டார்.

2023ஆம் ஆண்டு மே மாதம் அவர் கைது செய்யப்பட்டதையடுத்து, பல்வேறு வழக்குகள் தொடர்பில் சிறையில் இருந்து வருகிறார்.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவரது உடல்நிலை தொடர்பில் கவலைகள் அதிகரித்தன. குறிப்பாக அவரது வலது கண்ணின் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அண்மையில் இஸ்லாமாபாத்தில் உள்ள வைத்தியசாலையிலும் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore