நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட திரிசூலி 3A நீர்மின் திட்டத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள சுமார் 100 பேரை மீட்கும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெள்ளம் மற்றும் மோசமான வானிலை காரணமாக மீட்புப் பணிகளில் சவால்கள் ஏற்பட்டுள்ள போதிலும், நேபாள இராணுவம் உள்ளிட்ட மீட்புக் குழுக்கள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
சுரங்கப்பாதைக்குள் சிக்கியிருந்தவர்களில் சுமார் 350 பேர் இதுவரை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிக்கியுள்ளவர்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் தொடர்கின்றன.
இதனிடையே, நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 469 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் பலர் காணாமல் போயுள்ள நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
வெள்ளத்தால் பல வீதிகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதுடன், மின்சார உற்பத்தி மற்றும் பிற முக்கிய உட்கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் மேலும் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசமான வானிலைக்கு மத்தியிலும் சுரங்கத்தில் சிக்கியுள்ள அனைவரையும் பாதுகாப்பாக மீட்பதே தற்போதைய முக்கிய இலக்காக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





